லார்ட் தாக்கூர் கட்டாயம் விளையாட வேண்டியது ஏன்? - முக்கிய காரணங்கள் இதோ!

Shardul Thakur: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துன. ஆனால், ஷர்துல் தாக்கூர் தற்போது அணியில் இருக்க வேண்டிய காரணங்களை இங்கு காணலாம்.
Indian Cricket Team, Shardul Thakur: இந்திய அணி நடப்பு ஆடவர் உலகக் கோப்பை தொடரை (ICC World Cup 2023) ஹாட்ரிக் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் என சேஸிங்கிலேயே வெற்றிகளை குவித்து அதிக நெட் ரன்ரேட்டுடன் தற்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
பலமான பந்துவீச்சு படை
இந்திய அணியின் (Team India) இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சு. பேட்டிங்கும் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவை சேப்பாக்கத்தில் 199 ரன்களுக்கு சுருட்டியது, டெல்லியில் ஆப்கனை பெரிய ஸ்கோரை அடிக்க விடாதது, அகமதாபாத்தில் பாகிஸ்தானின் பேட்டிங் ஆர்டரை நிலைகுலைய செய்தது என இந்திய பந்துவீச்சாளர்கள் நடப்பு தொடரில் காட்டும் தீவிரம் என்பது உலகத்தரம் வாய்ந்தது.
வேகப்பந்துவீச்சை தலைமை தாங்கும் பும்ரா (Bumrah) தனது நியூ பால் ஸ்பெல், மிடில் ஓவர் ஸ்பெல், டெத் ஓவர் ஸ்பெல் என ஆட்டத்தின் எந்த பகுதியில் வீசினாலும் பெரும் தாக்கம் விளைவிக்கக் கூடிய வீரர் என்பது அனைவரும் அறிந்ததுதான். காயத்தில் இருந்து அவர் வந்திருந்தாலும் அவரின் வேகமும், துல்லியமும் எவ்விதத்திலும் குறையவில்லை. குறிப்பாக ஆட்டத்தை புரிந்துகொண்டு அதற்கெற்ப விளையாடும் தன்மையை அவர் அனுபவத்தில் இருந்து பெற்றிருக்கிறார்.
கேள்விக்குள்ளாகும் 8ஆவது இடம்...
இவருக்கு சிராஜ், குல்தீப், ஹர்திக், ஜடேஜா என முக்கிய பந்துவீச்சாளர்களும் துணை நிற்க பந்துவீச்சு படையே பலமாக காணப்படுகிறது. எனவேதான், இந்திய அணி நல்ல பேட்டிங் செய்யக் கூடிய பந்துவீச்சாளர் ஒருவரை தேடுகிறது. அதனால்தான், தற்போது சுழலில் அஸ்வினையும், வேகப்பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூரையும் அணி நிர்வாகம் டிக் செய்கிறது.
இதில் ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவது பெரும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஷமி என்ற உலகத்தர பந்துவீச்சாளர் இருக்க 8ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக ஷர்துலை தேர்வு செய்வது உங்களின் பேட்டிங் ஆர்டரின் மீது நம்பிக்கையில்லா தன்மையை காட்டுகிறது என்றும் பலரும் விமர்சனம் செய்கின்றனர். குறிப்பாக மூத்த வீரர்களும் ஆப்கான், பாகிஸ்தான் போட்டியில் ஷர்துலின் ஆட்டத்தை கேள்விக்குள்ளாக்கின்றனர்.
ஷர்துல் மீதான விமர்சனங்கள்
ஆப்கானுக்கு எதிராக 6 ஓவர்களை வீசி 31 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார், ஷர்துல். மேலும் அந்த போட்டியில் அவர் ஒரு அசத்தலான கேட்ச்சையும் பவுண்டரி லைனில் பிடித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டச் சூழல் காரணமாக அவருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதிலும் அவர் 12 ரன்களை கொடுத்திருந்தார். இவர் மேல் வைக்கப்படும் முக்கிய புகார் என்றால் இவர் அதிக ரன்களை கொடுக்கிறார் என்பதுதான்.
ஆனால், ஷர்துல் தாக்கூர் அணியில் விளையாட வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியிருக்கின்றனர். அதிலும் இந்த மூன்று முக்கிய காரணங்களைதான் அனைவரும் பொதுவாக வைக்கின்றனர். ஒன்று, அவர் நிச்சயம் 8ஆவது இடத்தில் அழுத்தமான சூழலில் 25-40 ரன்களை அடிக்கக் கூடிய ஒரு பந்துவீச்சாளர் வேண்டும் என்பதாக உள்ளது.
பெரிய ஷாட்களுக்கு போகக் கூடியவர்
இந்திய அணியின் மேல் வரிசை பேட்டிங் தரமாக இருந்தாலும், உலகக் கோப்பையில் இதுவரை கீழ்வரிசை பேட்டர்களான ஹர்திக் பாண்டியா - ஜடேஜா - அஸ்வின்/ஷர்துல் ஆகியோருக்கு பெரிதாக பேட்டிங்கில் வாய்ப்பு கிடைக்கிவில்லை. எனவே, ஒரு கட்டத்தில் இந்திய திணறும் வேளையில் 8ஆவது இடத்தில் ஒருவர் பெரிய ஷாட்களுக்கு சென்று சேர்த்து தரக்கூடிய ரன்கள் என்பது மிக அவசியமானது என்கின்றனர். எனவே, வேகப்பந்துவீச்சு ஆப்ஷனுக்கு வரும்போது, இதனை ஷர்துல்தான் பூர்த்தி செய்வார் என கூறுகின்றனர்.
விக்கெட்டுகளும் விழும்
இவர் இந்திய அணியின் லக்கி மேன் என்றும் சிலர் அழைக்கின்றனர். ஏனென்றால், இவர் பந்துவீச வரும் பெரும்பாலான வேளைகளில் பார்ட்னர்ஷிப்பை உடைத்து விக்கெட்டை எடுத்துவிடுகிறார். பல போட்டிகளில் இதனை பலரும் பார்த்துள்ளனர். ஆசிய கோப்பையிலேயே பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியில் முகமது ரிஸ்வான் விக்கெட்டை ஷர்துல் எடுத்து பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். ஆப்கன் போட்டியிலும் இவர் முக்கிய பேட்டரான ரஹ்மத் ஷாவின் விக்கெட்டை கைப்பற்றினார். இந்தியாவுக்கு தேவைப்படும் நேரத்தில், அதுவும் தேவைப்படும் விக்கெட்டை எடுத்து கொடுப்பவராக இவர் உள்ளார்.
பீல்டிங் பலம்
ஷமி (Shami) போன்ற மற்ற வீரர்களை இவர் பீல்டிங்கில் ஈடுபவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். அதற்கு சமீபத்திய உதாரணம், ஆப்கான் போட்டியில் அதிரடி பேட்டர் குர்பாஸின் கேட்சை எவ்வித பதற்றமும் இன்றி பவுண்டரி லைனில் நேர்த்தியாக பிடித்ததை சொல்லலாம். பீல்டிங்கில் ரன்களை காப்பது மிக மிக தேவையான ஒன்று என்பது முன்னாள் கேப்டன் தோனி, விராட் முதல் பலரும் ஒப்புக்கொண்ட பார்முலா என்பதை நாம் மறுக்க இயலாது.
உலகத் தரம் பந்துவீச்சாளர் ஷமி இந்திய பிளேயிங் லெவனில் இல்லாதது சற்று துரதிருஷ்டவசமானது என்றாலும் ஒரு அணியாக பார்க்கும்போது, ஷர்துலின் தேவை இந்தியாவுக்கு தேவை என்பதையும் நாம் மறுக்க இயலாது. அதிக போட்டிகளை விளையாடும்போது அவர் தேவையா இல்லையா என்பது உறுதியாகிவிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | இங்கிலாந்து தோல்வியால் அரையிறுதியில் இந்தியா...? - கூடுதல் குஷியில் ஆஸ்திரேலியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ