அடுத்த தோனி ரின்கு சிங்தான்... ஆனா அவர் அடிச்ச கடைசி சிக்ஸ் கணக்கில் வராது - ஏன் தெரியுமா?
Rinku Singh: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தும் அது ரின்கு சிங்கின் ரன் கணக்கில் வராது. இதுகுறித்து இத்தொகுப்பில் காணலாம்.
IND vs AUS T20, Rinku Singh: உலகக் கோப்பை தொடருக்கு (ICC World Cup 2023) பின்னரும் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணி கடைசி பந்துவரை சென்று 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 50 பந்துகளில் 110 ரன்களை குவித்தார். அதில் 11 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடக்கம். தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் 41 பந்துகளில் 52 ரன்களை எடுத்தார். இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் ரவி பீஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் மட்டுமே தலா 1 ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து முறையே 54 ரன்கள் மற்றும் 50 ரன்களை கொடுத்தனர். அர்ஷ்தீப் சிங்கும் நான்கு ஓவர்களுக்கு 41 ரன்களை கொடுத்தார். அக்சர் படேல் விக்கெட் எதுவும் எடுக்காமல் 4 ஓவர்களுக்கு 32 ரன்களையும், முகேஷ் குமார் 4 ஓவர்களுக்கு விக்கெட்டு எடுக்காமல் 29 ரன்களையும் கொடுத்தனர்.
தொடர்ந்து, இந்திய அணியின் பேட்டிங்கில் ருதுராஜ் முதல் ஓவரிலேயே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆட்டமிழந்தார். அதாவது, எந்த பந்தையும் சந்திக்காமல் அவர் ரன்-அவுட்டாக ஏமாற்றத்துடன் பெவிலியின் திரும்பினார். அதிரடி காட்டி வந்த ஜெய்ஸ்வால் 8 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின், இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் ஆஸ்திரேலிய பந்துவீச்சை திணறவைத்தனர். இஷான் கிஷன் அரைசதம் கடந்த நிலையில், இந்த ஜோடி 112 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. இஷான் கிஷன் 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 58 ரன்களை எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த திலக் வர்மாவும் 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் என 12 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியா கப் அடிக்க இதுதான் காரணம்... அஸ்வின் சொன்ன ஷாக் மொமண்ட்!
சூர்யகுமார் ருத்ரதாண்டவம்
அதன்பின் ரின்கு சிங் களமிறங்கி பார்ட்னர்ஷிப் கொடுக்க சூர்யகுமார் (Suryakumar Yadav) மற்றொரு முனையில் ருத்ரதாண்டவம் ஆடினார். சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் அடித்து இலக்கிற்கு அருகில் இந்தியாவை கொண்டு வந்தார். அவர் 42 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அடித்து மொத்தம் 80 ரன்களை சேர்த்திருந்தபோது லாங் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும் போது இந்தியாவின் வெற்றிக்கு 14 பந்துகளில் 15 ரன்கள் எடுக்க வேண்டும் என்றிருந்தது. ஆனால், 19ஆவது ஓவரில் அக்சர் படேல் தொடர்ந்து ரன் அடிக்காமல் அழுத்தத்தை அதிகரித்தார். இருப்பினும், ரின்கு சிங் அந்த ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்து ஸ்ட்ரைக்கையும் தக்கவைத்துக்கொண்டார்.
தோனியாக மாறிய ரின்கு
கடைசி ஓவருக்கு இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள்தான் தேவைப்பட்டது. அதிலும் முதல் பந்திலேயே ரின்கு சிங் பவுண்டரி அடித்து அழுத்தத்தை குறைத்தார். ஆனால், இரண்டாம் பந்தில் பைஸில் ஒரு ரன் எடுக்க, மூன்றாவது பந்தில் அக்சர் படேல் ஒரு கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க மீண்டும் இந்தியாவின் மீது அழுத்தம் வந்தது. ரின்கு சிங் மறுமுனையில் இருக்கிறார் வெற்றிக்கு 3 பந்துகளில் மூன்று ரன்கள் தேவை. ஆனால் அடுத்த பந்தில் ரவி பிஷ்னோய் ரன் அவுட்டாக ரின்கு சிங் பேட்டிங் முனைக்கு வந்தார்.
இப்போது 2 பந்துக்கு 2 ரன்கள், இதையும் மிட்விக்கெட் திசையில் அடித்து ஓடினார், ரின்கு சிங். ஆனால் இரண்டாம் ரன்னுக்கு ஓடிவரும் போது அர்ஷ்தீப் சிங் ரன்அவுட்டாக கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் தோனி மன்னிக்கவும் ரின்கு சிங் இருந்தார், ஷேன் அபாட்டின் கடைசி பந்தை ரின்கு சிங் (Rinku Singh Sixer) சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார். இதன்மூலம், ரின்கு சிங் 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களை எடுத்தார்.
ஆனால் சிக்ஸ் கணக்கில் வராது...
அது எப்படி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தாரே, அதை ஏன் சேர்க்கவில்லை என நீங்கள் கேட்டால் கடைசி பந்தை அபாட் கிரீஸை தாண்டி வீசியதால் அதை நோ-பாலாக கள நடுவர்கள் அறிவித்தனர். எனவே, ரின்கு சிங் அடித்த சிக்ஸர் அவரின் ரன் கணக்கில் சேரவில்லை. இல்லையே நோ-பாலில் சிக்ஸ் அடித்தாலும் அவர் கணக்கில்தானே வரும் என்றாலும் அதில்தான் ஐசிசி ஒரு ட்விஸ்ட்டை வைத்துள்ளது. அந்த விதியை இங்கு பார்க்கலாம்.
ஐசிசி விதிகள் சொல்வது என்ன?
ஐசிசி ஆடவர் சர்வதேச டி20 விளையாட்டு நிபந்தனைகள் பிரிவு 16.5.1-கீழ்,"நிபந்தனை பிரிவுகள் 16.1, 16.2 அல்லது 16.3.1 இல் வரையறுக்கப்பட்டுள்ளபடி இலக்கு எட்டப்பட்டவுடன், போட்டி முடிவடைகிறது. பிரிவு 41.17.2 (பெனால்டி ரன்கள்) தவிர, அதன் பிறகு நடக்கும் எதுவும் போட்டியின் ஒரு பகுதியாக கருதப்படாது" என குறிப்பிடுகிறது.
அதாவது, நேற்றைய போட்டியின்படி பார்த்தால் நோ பால் வீசப்பட்டவுடன், இந்தியா தனது இலக்கை அடைந்துவிட்டதால், ரின்கு சிங் அடித்த ஆறு ரன்கள் இலக்கிலேயே சேராது என்பதே இந்த விதி விளக்குகிறது. ஒருவேளை 2 ரன்னில் இருக்கும்போது அபாட் நோபால் வீசி ரின்கு சிங் சிக்ஸர் அடித்திருந்தால் அந்த 6 ரன்கள் இலக்கிலும், ரின்குவின் ரன் கணக்கிலும் சேர்ந்திருக்கும்.
மேலும் படிக்க | 'எனக்கு வருத்தம்ப்பா...' மிட்செல் மார்ஷின் புகைப்படம் - ஷமி சொன்னதை பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ