நம்பர் 3 இடத்தை தியாகம் செய்வாரா விராட் கோலி...? இந்திய அணிக்கு இதில் என்ன நன்மை?
Team India: இந்திய அணியின் நலனுக்காக விராட் கோலி நம்பர் 3 இடத்தை தியாகம் செய்ய வேண்டும். அது ஏன் என்றும் அதை செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
India National Cricket Team: இந்தியா அணியின் டெஸ்ட் சீசன் முடிந்துவிட்டது. இனி ஜூன் மாதம்தான் இந்திய டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அதுவும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2025-27 சுழற்சியின் கீழ் வந்துவிடும். மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் மே இறுதி வரை நடைபெறும் எனலாம்.
இந்நிலையில், தற்போது இந்திய அணியின் வொயிட் பால் சீசன் தொடங்கியிருக்கிறது. இந்த ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதன்பிறகு, பிப். 19ஆம் தேதி தொடங்கும் 50 ஓவர் வடிவிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதனால், பலமான ஸ்குவாடை கட்டமைக்க இந்திய அணியின் தேர்வுக் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
இந்திய அணியின் ஓப்பனராகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சொந்த மண்ணில் நடந்த 2023 ஐசிசி உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய அணி முன்னேறி, கோப்பையை நூலிழையில் தவறவிட்டதால் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபியை எப்படியாவது வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அனைத்து போட்டிகளையும் இந்திய அணி துபாயில் விளையாடுவதால் அதற்கேற்ப வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் தேர்வுக்குழு இருக்கிறது.
மேலும் படிக்க | விராட் கோலி, ரோகித் சர்மா கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுதான்..!
அந்த வகையில் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்தியா ஒருநாள் அணியின் ஓப்பனராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா உடன் சுப்மான் கில்தான் இதுவரை ஒருநாள் அணியில் தொடக்க வீரராக விளையாடி வந்தார். ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சமீபத்திய ஃபார்ம் ஓடிஐயில் அவரை நேரடியாக ஓப்பனிங் ஸ்பாட்டுக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக மோசமான பார்மில் இருப்பதால் சுப்மான் கில் ஓப்பனிங்கில் பேக்கப் வீரராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்திய அணியின் நம்பர் 3இல் சுப்மான் கில்
ஆனால், சுப்மான் கில் ஒருநாள் தொடரில் ஒரே இன்னிங்ஸில் 200 ரன்களை அடித்தவர், வொயிட் பாலில் அதிரடி ஓப்பனிங்கிற்கும் பெயர் பெற்றவர். எனவே அவரை பேக்அப்பாக வைத்திருக்க முடியாது என்பதால் அவரை 3ஆவது வீரராக விராட் கோலியின் இடத்தில் இறக்கலாம் என கூறுகின்றனர். அது எப்படி நம்பர் 3இல் பல ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி 50 சதங்களுக்கும் மேல் அடித்த விராட் கோலியை நம்பர் 4 ஸ்பாட்டுக்கு அனுப்புவது எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் அணியின் நலன் கருதி உலகத்தர வீரரான விராட் கோலி நம்பர் 4 இடத்தில் விளையாடுவது அவருக்கு எவ்விதத்திலும் பிரச்சினையாக இருக்காது என்றும் சிலர் கூறுகின்றனர். தனக்கு முன்னே வந்த வீரர்களையும், தனக்கு பின்னே வரும் வீரர்களையும் இணைத்து பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டிய பொறுப்பு நம்பர் 4 வீரருக்கு இருக்கிறது. ஆனால், இந்த நம்பர் 4 இல் இந்திய அணிக்கு ஒரு தீர்வை அளிக்கும் வீரராக யாருமே இல்லை.
மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபி: இந்த 3 சீனியர் வீரர்களுக்கு டாட்டா... இந்திய அணியின் மெகா பிளான்
இந்திய அணியின் நம்பர் 4இல் விராட் கோலி ஏன்?
எனவே, விராட் கோலி நம்பர் 4 ஸ்பாட்டில் விளையாடுவதால் நம்பர் 3இல் சுப்மான் கில்லோ அல்லது அவரது பார்ம் இல்லாதபட்சத்தில் சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட் போன்றவர்களையோ களமிறக்க வாய்ப்பளிக்கும். இவர்கள் டாப் ஆர்டரில் விளையாடுபவர்கள் என்பதால் இவர்களை புதிய நம்பர் 4 ஸ்பாட்டில் விளையாட வைப்பது சரியாக இருக்காது.
இந்தியாவின் நம்பர் 4 ஸ்பாட் பல ஆண்டுகளாக பிரச்சனைக்குரிய ஸ்பாட்டாகவே இருந்து வருகிறது. கடந்த 2023 உலக கோப்பையில் நம்பர் 4இல் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடி வந்தார். அதில் அவர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் கூட அவர் ஆசியாவுக்கு வெளியே இந்திய அணிக்கு கைகொடுப்பாரா என்பது தெரியாது.
இந்திய அணிக்கு இதனால் நன்மைகள் என்ன?
எனவே, நம்பர் 4இல் ஒரு நிலையான வீரரான விராட் கோலியை வைத்துவிட்டு நம்பர் 3ல் டாப் ஆர்டருக்கு பழக்கப்பட்ட வீரர்களில் ஒருவரை விளையாட வைப்பதன் மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பலப்படும் என கூறுகின்றனர்.
இதனால் இந்திய அணி ரிஷப் பண்ட் அல்லது கேல் ராகுல் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்டரை அணி வைத்துக்கொண்டால் போதுமானது. ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர், ஒரு சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என சிறப்பான அணியை கட்டமைக்கலாம். 2027ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை வரை விராட் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
விராட் கோலி நம்பர் 4 - புள்ளிவிவரங்கள்
விராட் கோலி தொடக்க காலகட்டத்தில் நம்பர் 4இல் விளையாடி வந்தவர்தான். அவர் நம்பர் 4இல் 42 இன்னிங்ஸில் களமிறங்கி 1,767 ரன்களை 55.21 என்ற சராசரியில் அடித்துள்ளார். இதில் 7 சதம், 8 அரைசதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 139 ரன்களை அடித்துள்ளார். அவரத ஸ்ட்ரைக் ரேட் 90.66 ஆகவும் உள்ளது. எனவே, விராட் கோலி அணியின் நலன் கருதி மீண்டும் நம்பர் 4 இடத்திற்கு சென்று, அணிக்காக இந்த தியாகத்தை செய்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கும் கேஎல் ராகுல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ