ஜெய் ஸ்ரீராம் கோஷம் சரியா... பாகிஸ்தானில் இந்திய வீரர்கள் மீது கல்வீச்சு நியாபகம் இருக்கா - இரண்டும் ஒன்னுதான்!
India vs Pakistan: 1989ஆம் ஆண்டு இந்திய வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், நேற்று அமகதாபாத்தில் எழுப்பப்பட்ட மத ரீதியிலான கோஷமும் ஒன்றுதான் என பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
India vs Pakistan: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அது கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு போட்டியாக பலராலும் பார்க்கப்படுகிறது. மதம், தேசம் உள்ளிட்ட காரணங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், கிரிக்கெட் மட்டுமின்றி அனைத்து விளையாட்டுகளும் கொண்டாடப்படுவதற்கும், உற்சாகமடைவதற்கும் மட்டுமேதானே அன்றி மத கோஷமிடுவதும், தனிப்பட்ட தாக்குதலும், மோதல்களும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் இங்கு புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
பலரும் கண்டனம்
அந்த வகையில், நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் சில பொறுப்பற்ற சம்பவங்கள் நடந்தது எனலாம். குறிப்பாக, இந்திய ரசிகர்கள் பலரும் முகமது ரிஸ்வான் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, ஜெய் ஸ்ரீராம் என மத ரீதியிலான கோஷம் எழுப்பியது என்பது பலராலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் போட்டியில் மத ரீதிலியான கேஷம் என்பது சரியானதாக இல்லை எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், சில அந்த கோஷங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்து தெரிவிக்கின்றனர். அவர்கள் தங்களின் ஆதரவு கருத்துடன் கூறும்போது, இந்திய வீரர்கள் ஒரு காலத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியபோது, ரசிகர்கள் மைதானத்தில் இருந்த இந்திய வீரர் மீது கல்வீச்சு தாக்குதல் தொடுத்ததை நினைவுக்கூர்ந்து பேசுகின்றனர். எனவே, அந்த வகையில், அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை இங்கு காண்போம்.
நடந்தது என்ன?
1989-90 ஆண்டுகளில் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க ஆட்டமான முதல் ஒருநாள் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியாவின் மேல் அதிக கவனம் இருந்தது.
கராச்சியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், பாகிஸ்தான் டாப் ஆர்டர் தடுமாறியதால் இந்தியா சற்று முன்னிலை பெற்றது. இதனால், பாகிஸ்தான் ஆதரவு ரசிகர்கள் இந்திய பீல்டர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். நிலமை கை மீறிப்போனதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதில் அசாருதீன், கேப்டன் ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடந்தது. அதாவது, 14.3 ஓவர்கள் வீசப்பட்டு பாகிஸ்தான் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் லாகூரில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில், பாகிஸ்தான் வென்றது மற்றும் தொடரையும் 2-0 என வென்றது.
இரண்டும் ஒன்றுதான்
இந்த சம்பவம் நடந்தது, 1989ஆம் ஆண்டில் என்பதை நாம் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். பாகிஸ்தானில் நடைபெற்ற சம்பவம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல தான், நேற்றைய அகமதாபாத் சம்பவமும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பல நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
கல்லால் எரிந்து தாக்குதல் தொடுக்காவிட்டாலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிராக சொல்லால் மத ரீதியில் கோஷத்தை எழுப்பவது எப்படி சரியாக இருக்கும் என்றும் ரிஸ்வான் அவுட்டாகி செல்வதற்கும், ஜெய் ஸ்ரீராம் என்ற மத ரீதியிலான கோஷத்திற்கும் என்ன சம்பந்தம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ