இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுத்து இருந்தது. வீராட்கோலி 143 ரன்னும், அஸ்வின் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடி ரன்களை குவித்தது. கேப்டன் வீராட்கோலி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டியில் அவர் முதல் இரட்டை சதமாகும்.283 பந்துகளில் 24 பவுண்டரியுடன் 200 ரன் எடுத்திருந்தபோது அவர் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட் இந்த ஜோடி 168 ரன் எடுத்தது. 6-வது விக்கெட்டுக்கு அஸ்வினுடன் விக்கெட் கீப்பர் விர்த்திமான் சகா ஜோடி சேர்ந்தார்.மறுமுனையில் இருந்த அஸ்வின் மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 237 பந்துகளை சந்தித்து 100 ரன்களை தொட்டார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். 33-வது டெஸ்டில் விளையாடும் அஸ்வினுக்கு இது 3-வது செஞ்சூரியாகும்.


விர்த்திமான் சகா 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த அமித்மிஸ்ராவும் தன் பங்குக்கு ரன்களை சேர்த்தார். இதனால் இந்தியாவின் ரன் வேகம் அதிகமானது. அஸ்வின் 113 ரன் எடுத்து இருந்தபோது கிரேக் பிராத்வெயிட் பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 253 பந்துகளில் 12 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 526 ரன்னாக இருந்தது.மறுமுனையில் இருந்த அமித் மிஸ்ரா 67 பந்துகளில் 50 ரன்னை தொட்டார். 53 ரன் எடுத்து இருந்தபோது அமித்மிஸ்ரா ஆட்டம் இழந்தார். அவர் அவுட்டோடு ஆட்டத்தை நிறுத்திக்கொள்வதாக வீராட்கோலி அறிவித்தார்.


இந்திய அணி 161.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.


தேவேந்திர பிஷூ, கிரேக் பிராத்வெயிட் தலா 3 விக்கெட்டும், கேப்ரியல் 2 விக்கெட்டும் எடுத்தனர்.


பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. கிரேக் பிராத் வெயிடும், சந்திரிகாவும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முகமது ‌ஷமி இந்த ஜோடியை பிரித்தார். சந்திரிகா 16 ரன்னில் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து தேவேந்திர பிஷூ களம் வந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட்இண்டீஸ் 1 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்து இருந்தது.