ஜெட் ஏர்வேஸ் விமானி மீது ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு
ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் இனவெறியுடன் செயல்படுவதாக இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த்த ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவில் ஹர்பஜன் சிங் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் பிரதமர் மோடிக்கும் இந்த டுவிட்டர் பதிவை டேக் செய்துள்ளார். ஹர்பஜன் சிங் பதிவையடுத்து அவரை பின்பற்றும் சமூக வலைதள பயனாளர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எதிராக ஆக்ரோஷமான முறையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, ஹர்பஜன் சிங் டிவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ள ஜெட் ஏர்வேஸ், இதுபோன்ற சம்பவங்கள் சகித்துக்கொள்ள முடியாது எனவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. மேலும், வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும் விருந்தினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த ஹர்பஜன் சிங், மேற்கூறிய சம்பவம் ஏப்ரல் 3 ஆம் தேதி சண்டிகார்- மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நடைபெற்றதாகவும், சக இந்தியரை விமானி நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இனவெறி கொண்ட பைலட் கண்டிப்பாக நீக்கப்பட்டு அவரது நாட்டுக்கு திருப்பி அனுப்பபட வேண்டும். தற்போதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.