நடப்பு சாம்பியனுக்கு ஆப்பு... இங்கிலாந்துக்கு ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி வைத்தியம்!
ENG vs AFG: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
ENG vs AFG: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசம், இந்தியா என இரண்டு ஆசிய அணிகளிடம் தோல்வியடைந்தது. இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்து, வங்கதேசத்திடம் வெற்றிப் பெற்றிருந்தது.
அந்த வகையில், நம்பிக்கை களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களுக்கு 284 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 86 ரன்களையும், இக்ரம் 58 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
285 ரன்களை இலக்காக வைத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கத்தில் இருந்தே ஆப்கானிஸ்தான் நெருக்கடி கொடுத்தது. அதன்படி, தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் 2 ரன்களுக்கு அவுட்டானார். தொடர்ந்து, ஜோ ரூட்டை முஜீப் அற்புதமான பந்துவீச்சால் வீழ்த்தினார். தொடர்ந்து, தொடக்க வீரர் டேவிட் மலானை ஆஃப் ஸ்பின்னர் நபி வீழ்த்தினார்.
தொடர்ந்து, இங்கிலாந்தின் மிடில் ஆர்டர், கீழ் வரிசை பேட்டர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஹாரி ப்ரூக் மட்டும் அரைசதம் அடித்து அவுட்டானார். இருப்பினும், டெயில்டெண்டர்களும் சிறிது ஆறுதல் அளித்தனர். 9ஆவது விக்கெட்டுக்கு 29 ரன்களையும், கடைசி விக்கெட்டுக்கு 17 ரன்களை எடுத்தனர். இதன்மூலம், ஆப்கானிஸ்தானின் சுழலில் சிக்கி இங்கிலாந்து 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
ஆப்கான் அணியில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும், நபி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தம் சுழற்பந்துவீச்சிலேயே இங்கிலாந்து 8 பேட்டர்களை சரித்தனர். அவர்களுக்கு உறுதுணையாக ஃபரூக்கி, நவீன் உல் ஹக் ஆகியோரும் தலா 1 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி கொடுத்தனர். தொடர்ச்சியாக பந்துவீச்சில் தாக்குதல் நடத்தி ஆப்கன் இந்த வெற்றியை பெற்றது.
ஆப்கன் மக்களுக்கு சமர்பணம்
மேலும், இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முஜீப் உர் ரஹ்மான் தனது விருதை ஆப்கனில் ஹெராட் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு அர்பணிப்பதாக அறிவித்தார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஆப்கன் வீரர்களுக்கு பலத்த வரவேற்பு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து பல அதிர்ச்சி தோல்விகளை உலகக் கோப்பையில் சந்தித்திருந்தாலும் இது மிகப்பெரிய வித்தியாசத்திலான தோல்வியாகும்.
இரண்டாவது வெற்றி
மேலும், இது ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகக் கோப்பையில் கிடைத்த இரண்டாவது வெற்றியே ஆகும். இதற்கு முன் 2015 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அந்த அணி வீழ்த்தியிருந்தது. அதன்பின் தற்போதுதான் உலகக் கோப்பையில் தனது வெற்றியை பதிவு செய்கிறது.
கடைசி இடத்தில் ஆஸி.,
ஆப்கானிஸ்தான் இந்த வெற்றியின் மூலம் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், உலகக் கோப்பையில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ