முதல் டெஸ்ட் 3_வது நாள்: இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் சதமடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளதால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 94.5 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய இந்திய அணி, 40.1 ஓவர்களில் 105 ரன் எடுத்து.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 155 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. ஸ்டீவன் ஸ்மித் 59, மிட்செல் மார்ஷ் 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இன்று மார்ஷ் 31 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சிலும் வேட் 20 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தார்கள். ஸ்மித், 187 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
இதன்பின்னர் 109 ரன்களில் ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஸ்மித். 3 சிக்ஸர்கள் அடித்த ஸ்டார்க், 30 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். பிறகு லயன் விக்கெட்டை உமேஷ் யாதவும் ஓ’கீஃப் விக்கெட்டை ஜடேஜாவும் வீழ்த்தினார்கள்.
ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 87 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 441 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை மட்டும் இந்திய அணி சாதித்துவிட்டால் அது உலக சாதனையாக இருக்கும்.