2_வது டெஸ்ட், 3வது நாள்: இந்தியா 126 ரன்கள் முன்னிலை
3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 126 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 276 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்தியாவை விடை 87 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றிருந்தது.
87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 10 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்திருந்தது.
மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் அபிநவ் முகுந்த், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஹசில்வுட் பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவர் ராகுலுடன் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராகுல் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (15), ஜடேஜா (2) ஆகியோரை ஹசில்வுட் அடுத்தடுத்து வெளியேற்றினார். பிறகு வந்த ரகானே, புஜாராவுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
புஜாரா 79 ரன்னுடனும், ரகானே 40 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 126 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ஹசில்வுட் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்திருகிறது.