IND vs AUS: இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; தொடர் 1-1 சமநிலை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி மூலம் தொடர் 1-1 சமநிலை அடைந்துள்ளது.
ராஜ்கோட்: ராஜ்கோட்டில் (Rajkot ODI) உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா (Australia) மற்றும் இந்தியா (India) இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களம் இறங்கியது. முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்விடைந்த இந்திய அணிக்கு (Team India), இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதால், தொடக்க வீரர்களாக வந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் ஷிகர் தவான் (Shikhar Dhawan) நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள். அதேநேரத்தில் அதிரடியாகவும் இருவரும் விளையாடினார்கள்.
81 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இந்தியா இழந்தது. ரோஹித் 42(44) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபுறம் சதத்தை நோக்கி சென்ற ஷிகர் தவான் 96(90) ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 7(17) ரன்னில் அவுட் ஆனார். அரைசதம் கடந்த நன்றாக ஆடிய விராட் கோலி 78(76) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல ராகுல் 80(52) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார்.
இறுதியாக 50 ஓவர் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. ஜடேஜா* 20(16) மற்றும் முகமது ஷமி* 1(1) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட்டும், கேன் ரிச்சர்ட்சன் இரண்டு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
வெற்றி பெற 341 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆடவந்த ஆஸ்திரேலியா அணி வீரர்கள் நிதானமாக ஆடினார்கள். முதல் ஐந்து விக்கெட் வரை, அதாவது ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) அவுட் ஆகும் வரை, இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற குழப்பம் நீடித்து வந்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் இந்தியாவின் வெற்றி உறுதியானது.
கடைசியாக 49.1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 304 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 98(102) ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி மூன்று விக்கெட்டும், நவ்தீப் சைனிர, வீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டும், ஜஸ்பிரீத் பும்ரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளதால், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.