INDvAUS 2வது ஒருநாள் போட்டி: வெற்றியை தொடருமா இந்திய அணி?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை நாக்பூரில் நடைபெற உள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று வருகிறது. அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் மார்ச் 2 ஆம் தேதி பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டை கைப்பற்றினர். கேதர் ஜாதவ் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 81 ரன்கள் எடுத்தார். கேதார் ஜாதவ் மற்றும் எம்.எஸ். தோனியின் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், நாளை இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூர் விதார்பா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இன்று நாக்பூர் சென்றடைந்தது. அங்கு பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளதால், இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற இந்திய அணி முயற்ச்சி செய்யும். அதேபோல முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் ஆஸ்திரேலிய அணி விளையாடக்கூடும்.
நாக்பூரில் இந்தியா 17 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 9 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு இந்தியா விளையாடியது. அதிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் மே 30 முதல் இங்கிலாந்தில் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடரின் இதுவாகும். எனவே இந்த தொடரில் இந்திய அணியின் திறமை மற்றும் பலம், பலவீனம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒரு கட்டத்தில், இந்த தொடர் இந்தியாவுக்கு உலகக் கோப்பைக்கு முன் ஒரு சோதனை ஆகும்.