முதல் டெஸ்ட், 2ம் நாள்: அரைசதம் அடித்த ஜடேஜா; இந்தியா 297 ரன்னுக்கு ஆல்-அவுட்
முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 297 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சை ஆட உள்ளது.
ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக அரை சதம் அடித்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 297 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இன்னும் சற்று நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சை ஆட உள்ளது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரையும் இந்திய அணி வென்றது.
இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஆன்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீசின் பந்து வீச்சை தாக்கு பிடிக்காமல் மயங்க் அகர்வால் 5 ரன்னிலும், புஜாரா 2 ரன்னிலும், அடுத்த வந்த கேப்டன் விராத் கோலி 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தனர். 25 ரன்னுக்கு மூன்று விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இந்தநிலையில், இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆடிய இந்திய அணி சுழல் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா தனது நிதான ஆட்டத்தால் அரைசதம் அடித்தார். அவர் 58(112) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்திய அணி 96.4 ஓவரில் 297 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும், சேஸ் இரண்டு விக்கெட்டும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.