6-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி!
நேற்று நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராத் கோலியின் சதத்தால், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்றது. இந்தப் போட்டியில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 204 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸோண்டோ 54 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களையும், பும்ரா, சேஹல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 32.1 ஓவரில் 206 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 15 ரன்னிலும், தவான் 18 ரன்னிலும் ஆட்டமிழக்க, நிலைத்து நின்ற கேப்டன் விராத் கோலி அபாரமாக ஆடி, சதமடித்தார். இது அவருக்கு 35ஆவது சதம் இதுவாகும். அவர் 96 பந்துகளில், 129 ரன்கள் குவித்தார். ரஹானே 34 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் ஆசியக் கண்டத்திற்கு வெளியே, ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில், 5 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடர் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, இதற்கு முன் 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த சாதனையை இந்திய அணி சமன் செய்தது.