ஐபிஎல்2017: 6வது லீக் போட்டி- 4 மணிக்கு ஐதராபாத், குஜராத் மோதல்
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 5-ம் தேதி தொடங்கி மே 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
5-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. ஐதராபாத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முதலாவது ஆட்டம்:-
நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி தொடக்க ஆட்டத்தில் 35 ரன் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி குஜராத்தையும் வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் 183 ரன் குவித்தும் கொல்கத்தாவிடம் தோற்றது. இதனால் அந்த அணி முதல் வெற்றியை பெற கடுமையாக போராட வேண்டும்.
இந்த அணியின் பேட்டிங் நன்றாக இருக்கிறது. ஜேசன்ராய், மெக்கல்லம், ஆரோன் பிஞ்ச், வெய்ன் சுமித், கேப்டன் ரெய்னா, தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். காயம் காரணமாக ஜடேஜா, பிராவோ இல்லாததால் பந்துவீச்சு மோசமான நிலையில் இருக்கிறது.
இரு அணிகளும் 3 முறை மோதியுள்ளன. இந்த மூன்று ஆட்டத்திலும் ஐதராபாத் அணியே வெற்றி பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2-வது ஆட்டம்:-
மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனே அணியிடம் தோற்று இருந்தது. தற்போது சொந்த மண்ணில் ஆடுவதால் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
அந்த அணியில் பார்த்தீவ் பட்டேல், ரோஸ் பட்லர், அம்பதி ராயுடு, பொல்லார்ட், ஹார்த்திக் பாண்டியா, பும்ரா, டிம் சவுத்தி உள்ளனர். இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணியில் இணைந்து உள்ளார்.
கொல்கத்தா தனது முதல் ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் காம்பீர், கிறிஸ்லின், உத்தப்பா, மனிஷ் பாண்டே, யூசுப் பதான், சுனில் நரீன், போல்ட், கிறிஸ் வோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.