2019 ஐபிஎல் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டம் தல தோனி மற்றும் விராட் கோலி மோதல்
இன்று இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.
கடந்த 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 11 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. 2019 வருடம் ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் நடக்க உள்ளது. எப்பொழுதும் ஐபிஎல் தொடர் "மே" மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் வரும் மே மாதம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால் "ஐபிஎல் 12" சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
கடந்த ஜனவரி மாதம் ஐபிஎல் தொடர் எங்கு, எப்பொழுது தொடங்கும் என்ற அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.அதாவது இந்த வருட ஐபில் போட்டி (சீசன் 12) இந்தியாவில் தான் நடைபெறும் எனவும், தொடரின் முதல் போட்டி மார்ச் மாதம் 23 ஆம் தேதி துவங்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவித்தது.
இந்தியாவில் மக்களவை தேர்தல் வர இருப்பதால், அதற்க்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர், ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்படும் எனவும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ. வரும் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 17 போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால் முதல் இரு வாரங்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற போட்டிகளுக்கான அட்டவணை தேர்தல் தேதி அறிவித்த பின்னர் வெளியிடப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தற்போது பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ள அட்டவணையின் படி, 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகின்றன.