ஐபிஎல் 2019: புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்
IPL புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது
ஐபிஎல் தொடரின் 12வது சீசன் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் 5-வது லீக் ஆட்டம் நேற்று முடிந்தது. இன்று ஆறாவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.
கடந்த 23 ஆம் தேதி தொடங்கி முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எளிதாக வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது இரண்டாவது லீக் ஆட்டத்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டெல்லி பெரோஷ் மைதானத்தில் ஆடியது. இந்த போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி.
இதுவரை ஆடிய இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய பிரத்திவி ஷா 24(16), ஷிகர் தவான் 51(47) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 18(20), ரிஷாப் பன்ட் 25(13), இன்கிராம் 2(2) என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை அணி தரப்பில் டெயின் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 148 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் 44(26), அம்பத்தி ராயுடு 5(5) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 30(16) ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இவர்களை தொடந்து களமிறங்கிய கேதர் ஜாதவ் 27(33) ரன்கள் குவித்து இறுதி ஓவரில் வெளியேறினார். மறுமுனையில் தோனி 32(35) ரன்களுடன் காத்திருக்க, இறுதியாக களமிறங்கிய பிராவோ 4(3) ரன்கள் குவித்து ஆட்டத்தின் 19.3-வது பந்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி தரப்பில் அமித் மிஷ்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருது ஷேன் வாட்சனுக்கு அளிக்கப்பட்டது.