ஐபிஎல் 2019: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா யுவராஜ்? அவரின் கருத்து
யாருக்கும் நெருக்கடி தராதவகையில் எனது ஓய்வு குறித்து அறிவிப்பேன் என அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை: நேற்று நடைபெற்ற IPL 2019 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் டெல்லியை பேட் செய்ய அழைத்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சிக்சர் மழையால் டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் யுவராஜ் சிங்கை தவிர்த்து மற்ற வீரர்கள் நன்றாக ஆடாததால், 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டை இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் சார்பில் விளையாடிய யுவராஜ் சிங் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் எதிர்காலம் கடந்த சில ஆண்டுகளாக விவாதத்திற்கு உட்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருக்கும் யுவராஜ்சிங், கடந்த கால சில ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடவில்லை. அவரை ஏலம் எடுப்பதிலும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இறுதியாக மும்பை அணி அவரை, இந்த வருட ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் சார்பில் விளையாடிய யுவராஜ் சிங் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அணியின் வெற்றிக்கு உதவவில்லை. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ஓய்வுக்கான சரியான நேரம் வரும்போது அதுக்குறித்து அறிவிப்பை முதலில் அறிவிப்பேன். யாருக்கும் நெருக்கடி தராதவகையில் எனது ஓய்வு குறித்து அறிவிப்பேன். ஓய்வு குறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறேன்.
'கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியவில்லை. இருப்பினும், எனக்கு நானே சுய-பகுப்பாய்வு செய்தபோது, சில காலம் கிரிக்கெட் போட்டியில் விளையாடலாம் என்று எனக்குத் தோன்றியது. இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார்.