RR vs CSK: ராஜஸ்தானிடம் மீண்டும் மண்ணை கவ்விய சிஸ்கே... புள்ளிப்பட்டியலிலும் வீழ்ச்சி!
IPL 2023 RR vs CSK: ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று, தனது ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது.
IPL 2023 RR vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரின் 37ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு, ஜெய்ஸ்வால், பட்லர் ஆகியோர் அதிரடி தொடக்கத்தை அளித்தனர்.
பட்லர் பொறுமை காக்க ஜெய்ஸ்வால் பட்டாசாய் வெடித்தார் எனலாம். ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே ஆகியோரின் பந்துவீச்சை பவர்பிளேயில் பதம் பார்த்தார். பட்லர் 27(21) ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த சஞ்சு சாம்சன் 17(17) ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஜெய்ஸ்வால் 77(43) ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஹெட்மயரும் 8(10) ரன்களில் வெளியேறினார்.
அதிகபட்ச ஸ்கோர்
இறுதிக்கட்டத்தில், ஜூரேல், படிக்கல் ஜோடி பொறுப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. ஜூரேல் 34(15) ஆட்டமிழந்தாலும், படிக்கல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம், ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்தது. படிக்கல் 27(13) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 2, தீக்ஷனா, ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். மேலும், இதுதான் ஐபிஎல் தொடரில் ஜெய்ப்பூர் ஆடுகளத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
மேலும் படிக்க | 15 கோடிக்கு வாங்கினாலும் ஒழுங்காக ஆடாத இஷான் கிஷான் மீது அதிருப்தியில் ரசிகர்கள்
டாப் ஆர்டர் சறுக்கல்
203 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருதுராஜ் நல்ல தொடக்கத்தை அளித்தாலும், கான்வே சோபிக்க தவறினார். இதனால், அவர் 16 பந்துகளில் 8 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து, கெய்க்வாட்டும் 47(29) ரன்களில் ஆட்டமிழக்க, சிறிதுநேரத்தில் ரஹானே 15(13) ரன்களிலும், ராயுடு ரன் ஏதும் இன்றியும் பெவிலியன் திரும்பினர். இதன்பின், தூபே உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி விரைவாக ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 25 பந்துகளில் 50 ரன்களை குவித்த நிலையில், மொயின் அலி 23(12) ரன்களில் ஆட்டமிழந்தார்.
பினிஷிங் சரியில்லை
துபே அதிரடியை தொடர்ந்தாலும், ஜடேஜா பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. இதனால், சிஎஸ்கேவால் 20 ஓவர்களில் 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தங்களது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தனர். துபே கடைசி பந்தில் ஆட்டமிழந்தாலும்,52(33) ரன்களை எடுத்திருந்தார். இது அவர் இத்தொடரில் அடிக்கும் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும். ஜடேஜா 23(15) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் ஸாம்பா 3, அஸ்வின் 1, குல்திப் யாதவ் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
3ஆம் இடத்தில் சிஎஸ்கே
புள்ளிப்பட்டியலில், ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி (5 வெற்றி, 3 தோல்வி) 10 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. மேலும், முதலிடத்தில் இருந்த சிஎஸ்கே அதே 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இரண்டாவது இடத்தில் குஜராத் அணி, அதே 10 புள்ளிகளுடன் உள்ளது.
மேலும் படிக்க | அடுத்த சீசனில் அபார விலைக்கு ஏலம் போகப்போகும் இந்தியாவின் இளம் கிரிக்கெட்டர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ