IPL 2023 LSG vs GT: நடப்பு ஐபிஎல் தொடரின் 30ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. லக்னோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹர்திக் அரைசதம்


இருப்பினும், அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். இருப்பினும், ஓப்பனர் சஹா உடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியா நிதானமாக ரன்களை குவிக்க தொடங்கினார். இந்த ஜோடி 68 ரன்களை குவித்த நிலையில், சஹா 47(37) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் 10(12) ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா 66(50) ரன்களுக்கும், மில்லர் 6(12) ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 


இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 135 ரன்களை மட்டுமே எடுத்தது. ஸ்டாய்னிஸ், குர்னால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நவீன் உல்-ஹக், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.



மேலும் படிக்க | இந்த சீசனுடன் ஓய்வா? தோனி பதிலால் கண்கலங்கிய ரசிகர்கள்! என்னா மனுஷம் யா?


இதையடுத்து, 136 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணிக்கு, நல்ல தொடக்கம் அமைந்தது. பவர்பிளே ஓவர் முடிந்த 7ஆவது ஓவரில், கைல் மேயர்ஸ் 24(19) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அந்த அணி, 6.3 ஓவர்களில் 55 ரன்களை எடுத்திருந்தது. வெற்றிக்கு 81 பந்துகளில் 81 ரன்கள் தேவைப்பட்டது.


நிதானத்தால் தோல்வி


லக்னோ அணி பேட்டர்களை ரன் எடுக்கவிடாமல் குஜராத் பந்துவீச்சாளர்கள் சிக்கனமாக பந்துவீசினர். 38 பந்துகளில் கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். அதன்பின்னர் அவரும் மிகுந்த நிதானம் காட்டினார். குர்னால் பாண்டியா 23(23) ரன்களுக்கும், பூரன் 1(7) ரன்னுக்கும் ஆட்டமிழக்க அந்த அணியின் மீது அழுத்தம் அதிகரித்தது. 


இதனால், கடைசி இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஷமி, வெறும் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதனால், கடைசி ஓவரில் 12 ரன்கள் வேண்டியதாக இருந்தது. ஸ்ட்ரைக்கில் ராகுல் நிற்க, மோகித் சர்மா பந்துவீச வந்தார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ராகுல், அடுத்த பந்தில் ஜெயந்த் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளில் 8 பவுண்டரிகள் உள்பட 68 ரன்களை எடுத்திருந்தார். அரைசதம் அடித்த பின்னர், அவர் சந்தித்த 23 பந்துகளில் வெறும் 18 ரன்களை மட்டும் அவர் எடுத்தார். இது தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்ததாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.