ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கொல்கத்தா போட்டி டிரா
ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகளிடையே நேற்று நடந்த லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணியும், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணியும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணி எதிரணியின் கோல் எல்லையில் தீவிரமாக தாக்குதல் நடத்தியது. ஆனால் அவர்கள் கோல் அடிக்கும் முயற்சியை கொல்கத்தா வீரர்கள் தடுத்தனர். முதலில் சில நிமிடங்கள் பின்தங்கி இருந்த கொல்கத்தா அணி, பிறகு சுதாரித்துக்கொண்டு தாக்குதலை தீவிரப்படுத்தியது. இருப்பினும் அவர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் 0 - 0 என்று சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தாக்குதலை தீவிரப்படுத்தின. 59-வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் டவுட்டி ஒரு கோல் அடித்தார். ஆனால் சென்னை வீரர்களான ராணே 66-வது நிமிடத்திலும், முல்டர் 70-வது நிமிடத்திலும் கோல் அடித்து தங்கள் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். கொல்கத்தா அணியும் விடாமல் போராடியது. 86-வது நிமிடத்தில் அந்த அணியின் ஹூம் ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமநிலை பெற்றது. இதைத்தொடர்ந்து ஆட்டம் 2-2 என்று சமநிலையில் முடிந்தது.