மேஜர் தயான் சந்த்: இன்று தேசிய விளையாட்டு தினம்
உலக அரங்கில், இந்தியா, ஹாக்கி போட்டியில் தனிச் சிறப்புடன் விளங்கியதற்கு தயான் சந்த் காரணம் ஆவார். இவர், கடந்த, 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார்.
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் தனது தந்தையின் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அவரும் பயிற்சியில் ஈடுபட்டார்.
16-வயதில் தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவ இருந்த நிலையில், களமிறங்கிய சந்த், நான்கு கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெற செய்தார்.
இதுவே, இவருக்கு ராணுவப் பணி கிடைக்கவும் வாய்ப்பாக அமைந்தது. பின்னாளில், தனித்துவமான திறனை வெளிப்படுத்தி, கோல்மழை பொழிந்து வந்த இவரை, மந்திரவாதி என்றும் அழைத்தனர்.
கடந்த, 1928-ம் ஆண்டு முதல் 1948-ம் ஆண்டு வரை, சர்வதேச ஹாக்கி போட்டிகளில், 400 கோல்கள் அடித்து சாதனையும் படைத்துள்ளார்.
கடந்த, 2012-ம் ஆண்டு இவரது உருவம் பொறித்த தபால் தலை, இந்திய அரசால் வெளியிடப்பட்டது. மேலும், டெல்லியில் அவரது பெயரிலேயே தேசிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசால் தேசிய விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவுக்காக, பல வெற்றிகளை குவித்த அவர், கல்லீரம் புற்றுநோயால் 1979-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி உயிரிழந்தார். அவரது பிறந்த நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப் படுகிறது.