ஒலிம்பிக் பாட்மின்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சிந்து.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பைனலில் தரவரிசையில் 10-வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனை, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.


முதல் செட்டின் துவக்கத்தில் இருந்தே பின் தங்கினார் சிந்து (3-7). இது 6-11 என, தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் 16-17, அடுத்து 19-19 என, கரோலினாவை நெருங்கினார் சிந்து. பின் தொடர்ந்து அசத்த, முதல் செட்டை சிந்து 21-19 என, கைப்பற்றினார்.


இரண்டாவது செட்டில் 2-11 என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார். இதில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம் என்ற நிலையில், இரண்டாவது செட்டை சிந்து 12-21 என, இழந்தார்.


இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி மூன்றாவது மற்றும் கடைசி செட்டுக்கு சென்றது. இதிலும் மீண்டும் சொதப்பத் துவங்கினார் சிந்து (1-6).


இதன் பின் சற்று சுதாரித்துக் கொண்ட சிந்து, கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க, ஸ்கோர் 10-10 என, சமனை எட்டியது. இருப்பினும், சிந்து மறுபடியும் ஏமாற்ற 11-15 என, பின் தங்கினார்.கடைசியில் மூன்றாவது செட்டை 15-21 என, இழந்தார். 1 மணி நேரம், 19 நிமிட போராட்டத்தின் முடிவில், 21-19, 12-21, 15-21 என்ற கணக்கில் போராடி தோற்றார் சிந்து.


ஒலிம்பிக் வரலாற்றில் முதல் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய முதல் இந்தியர், வீராங்கனை என்ற பெருமை பெற்றார் சிந்து. கரோலினா தங்கம் வென்றார்.