உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற முடிவு -ஷோயிப் மாலிக்!!
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷோயிப் மாலிக் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!!
பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் ஷோயிப் மாலிக் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்!!
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2019 உலக கோப்பை போட்டியுடன் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் ஷோயப் மாலிக் அறிவித்துள்ளார். எனினும் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் அவருடைய உடற்தகுதி மற்றும் செயல்திறன் சிறப்பாக இருந்தால் மட்டும் என்று தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான மாலிக், தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஜிம்பாப்வே அணியுடன் சேர்ந்தது பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை முத்தரப்பு டி20 தொடரில் சந்திக்கிறது. தவிர, ஜிம்பாப்வேக்கு எதிராக பாகிஸ்தான், ஐந்து ஒருநாள் தொடரிலும் விளையாடுகிறது.
இப்போட்டி துவங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாலிக், "2019 உலக கோப்பை தான் என்னுடைய கடைசி 50 ஓவர் கிரிக்கெட். நான் தொடர்ந்து நல்ல உடற்தகுதியுடன் இருந்தால், டி20 போட்டியில் விளையாட முயற்சி செய்கிறேன்" என்று தெரிவித்தார்.
மாலிக், 50 ஓவரில் 6975 ரன்கள், 154 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 9 சதம் மற்றும் 41 அரைசதங்கள் அடித்துள்ளார். 2007ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் நாக்-அவுட்டான பிறகு, பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மாலிக் நியமிக்கப்பட்டார். மூன்றுவித போட்டிகளையும் சேர்த்து 56 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த மாலிக், 36 வெற்றிகள், 18 தோல்விகளை சந்தித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு மாலிக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது அதிகபட்ச ஸ்கோரான 245 ரன்னும், அப்போட்டியில் தான் பதிவு செய்யப்பட்டது. 35 டெஸ்ட் போட்டிகளில் 1898 ரன், 32 விக்கெட் எடுத்துள்ளார்.