பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

31-வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சனிக்கிழமை காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.


இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றுள்ளார்.


தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவரை எதிர்த்து போட்டியிட்ட சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும். அமெரிக்காவை சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.


சேலம் மாவட்டம் குக்கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் அவரின் பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவருக்கு ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.


மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். விளையாட்டில் மிகுந்த ஆர்வமுள்ள மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார்.


பாரா ஒலிம்பிக் போட்டி கலந்து கொல்வதற்கு முன்னர் அளித்திருந்த பேட்டியில் கூறியதாவது:- பள்ளிப் பருவத்தில் உயரம் தாண்டுதலில் அசாத்தியமான எனது திறமையை அறிந்த உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், எனக்கு ஊக்கம் கொடுத்து பயிற்சி அளித்தார். கடந்த முறை நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 1.74 மீட்டர் உயரமே தாண்டினர். இந்த முறை நான் 2 மீட்டர் உயரத்தை தாண்டி உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது" எனக் கூறியிருந்தார். அந்த நம்பிக்கையே அவருக்கு தற்போது தங்கப்பதக்கம் வென்றளித்திருக்கிறது.


வீடியோ பார்க்க:-