t20 போட்டிகளில் மேலும் ஒரு சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா!
மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் ஷர்மா சதம் அடித்ததன் மூலம், டி20 போட்டிகளில் 4 சதம் அடித்த வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார்!
மேற்கிந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் ஷர்மா சதம் அடித்ததன் மூலம், டி20 போட்டிகளில் 4 சதம் அடித்த வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார்!
மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை எளிதாக வென்ற நிலையில், தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆபார வெற்றிபெற்றதை அடுத்து நேற்று லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் விளையாடியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிரடியாக ரன்களைக் குவித்தது.
ஷிகர் தவான் 43(41) ரன்களில் வெளியேற, அவரை தொடர்ந்து வந்த ரிஷாப் பன்ட் 5(6) ரன்களில் வெளியேறினார். எனினும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டிய ரோகித் ஷர்மா 111(61) ரன்கள் எடுத்தார். இதன்மூலன் டி20 வரலாற்றில் 4 சதம் அடித்த வீரர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றுள்ளார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 195 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியா களமிறங்கியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாத மேற்கிந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களுக்கு ஆல் அவட் ஆனது. இதனையடுத்து இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரினை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது, பூம்ரா, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். 61 பந்துகளில் 111 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது!