ரவி சாஸ்திரி கடந்து வந்த பாதை!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1962-ம் ஆண்டு மே 27-ம் தேதி மும்பையில் பிறந்தவர் ரவி சாஸ்திரி. இவரது முழுப்பெயர் ரவிஷங்கர் ஜெயத்ரிதா சாஸ்திரி. மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் அவர்.
கல்லூரியில் படித்த காலங்களில் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டிலும் கால்பதித்தார். வலது கை ஆட்டக்காரரான இவர், இடது கை சுழல் பந்து வீச்சாளர். ஒரு பேட்ஸ்மேனாக 'சப்பாத்தி அடி' (பிளிக் ஆஃப் தி பேட்ஸ்) இவரது தனி அடையாளமாகத் திகழ்ந்தது.
1981-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக முதன் முதலாக ஆடிய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதே ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடினார். அதன்பின்னர் பேட்டிங் வரிசையில் 10-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு முன்னேறினார் ரவி சாஸ்திரி. பின்னர் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் புகழ்பெற்றார்.
1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளிலும் அபாரமாக விளையாடினார். அதே ஆண்டு 25 வயதினருக்கு கீழ் உள்ள இந்திய அணிக்குத் தலைமை ஏற்றார். இவரது தலைமையில் இங்கிலாந்தை இந்தியா, இன்னிங்க்ஸ் வெற்றி கண்டது.
1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 'த சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்' என்ற அழைக்கப்பட்ட போட்டிகளில் சாஸ்திரி 182 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1987-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டன. சாஸ்திரி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் மேட்சில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்தார். இந்தியாவின் வெற்றிகரமான ஆல்ரவுண்டர் என பாராட்டப்பட்ட சாஸ்திரி, 80 டெஸ்ட் போட்டிகளில் 3830 ரன்களை 35.79 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். 151 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 150 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3108 ரன்களை குவித்துள்ள ரவி சாஸ்திரி, 129 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டனாகவும் வலம்வந்த ரவிசாஸ்திரி, முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து 1994-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
1995-ம் ஆண்டு தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகமானார். ஐசிசி, பிசிசிஐ ஆகியவற்றின் தற்காலிக அலுவல் பணிகளிலும், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுராகவும் பணியாற்றியுள்ளார்.
கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டில் இந்திய அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தற்காலிகப் பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றினார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி இவர் தலைமையில் இந்திய அணி பயணிக்கப்போகிறது.