அதிரவைக்கும் ரவிசாஸ்திரியின் சம்பளம்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். மேலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் ஜாகீர்கான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ராகுல் டிராவிட் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாக கமிட்டி உறுப்பினர் வினோத் ராய், டியானா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் அணியின் உதவி பணியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்குவது என்பது குறித்து நிர்ணயிக்க 4 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கமிட்டியினர் சம்பளம் குறித்த தங்களது சிபாரிசுகளை 22-ம் தேதி நிர்வாக கமிட்டியிடம் அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ரவிசாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடியில் இருந்து ரூ.7.5 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே ஆண்டுக்கு ரூ.6.5 கோடி பெற்று வந்தார்.