சுப்ரீம் கோர்ட்டு: தோனி மீதான கிரிமினல் நடவடிக்கை தடை
இந்து கடவுளை அவமதித்ததாக டோனி மீது தொடரப்பட்ட வழக்கில் கிரிமினல் நடவடிக்கை ரத்து என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
ஒரு பத்திரிகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியை, இந்து கடவுளான மகாவிஷ்ணு போல சித்தரித்து படம் வெளியானது. அந்த படத்தில் டோனிக்கு பல கைகள் இருப்பது போன்றும், ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபார பொருட்களை அவர் வைத்து இருப்பது போலவும் இருந்தது. அதில் ஒரு கையில் ஷூ ஒன்றும் இடம் பெற்று இருந்தது. இந்த படம் இந்து மதத்தினரை புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் விளம்பரத்தில் தோன்றிய டோனி மற்றும் அதனை வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடகாவை சேர்ந்த சமூக சேவகர் ஜெயக்குமார் ரேமத், கர்நாடகாவில் பொது நல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, டோனி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த போலீசாருக்கு அறிவுறுத்தியதுடன், கேப்டன் டோனி கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டார்.
தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று டோனி சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக ஐகோர்ட்டு டோனி மீதான விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனை அடுத்து கேப்டன் டோனி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், தோனி மீதான கிரிமினல் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.