இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்: 126 ரன்களில் சுருண்டது ஜிம்பாப்வே அணி
மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே வந்ததுள்ளது. இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில்தான் நடைபெற்றது. இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு போட்டி தொடங்கியது.
ஹராரேயில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது.
ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக சிபந்தா மட்டும் 53 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 34.3 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட் செய்து வருகிறது. பந்து வீச்சில் இந்திய அணியை பொறுத்தமட்டில் ஒய்.எஸ் சாஹல் 3 விக்கெட்டுகளையும், சரண், குல்கர்னி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.