ஊசிப்போட்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஷமி... அதிரவைக்கும் தகவல்!
India National Cricket Team: முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்த அதிர்ச்சிக்கர தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
India National Cricket Team: இந்திய கிரிக்கெட் பாரம்பரியத்தில் உலகத்தர பேட்டர்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு ஒரு 30, 40 வீரர்களையாவது பலரால் சொல்லிவிடலாம். ஆனால், உலகத்தரத்தில் பந்துவீச்சாளர் என்றால் அதுவும் குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் என்றால் அந்தளவிற்கு சொல்ல முடியாது எனலாம். இருப்பினும், இந்திய அணியும் தற்போது உலகத்தரத்திலான வேகப்பந்துவீச்சாளர்களை உற்பத்தி செய்யும் களமாக மாறிவிட்டது எனலாம்.
கபில் தேவ் தொடங்கி ஜவஹல் ஸ்ரீநாத், ஜாகீர் கான், ஸ்ரீசாந்த், இர்பான் பதான், பிரவீன் குமார், புவனேஷ்வர் குமார் தற்போது ஷமி, பும்ரா, சிராஜ் என தனித்து தெரியும் வேகப்பந்துவீச்சாளர்கள் எதிரணி பேட்டர்களை கதிகலங்கச் செய்கிறார்கள். வருங்கால வீரர்களும் ஐபிஎல் மூலம் கண்டெடுக்கப்பட்டு வருகின்றனர். முன்பிருந்த சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது எனலாம்.
கபில் தேவிற்கு பின் ஹர்திக் பாண்டியாவை போன்று வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை கண்டடைய இந்தியாவுக்கு நீண்ட காலம் எடுத்தது, இன்னும் அவருக்கு மாற்று வீரர் அடையாளம் காணப்படவில்லை எனலாம், ஆனால் நிலைமை நிச்சயம் மாறும். அதற்கான அத்தனை விஷயங்களுக்கும் அடித்தளம் போடப்பட்டுள்ளது எனலாம்.
அந்த வகையில் இந்திய அணியில் தற்போது சீனியர் வேகப்பந்துவீச்சாளராக இருப்பவர் முகமது ஷமிதான். 2015ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையில் இருந்து 2023ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை வரை இந்திய அணிக்காக விளையாடி உள்ளார், இன்னும் பல தொடர்களில் இந்திய அணிக்காக தாக்குதல் தொடுக்கவும் இருக்கிறார். ஆனால், தற்போது அவர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
உலகக் கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா என அனைத்து வீரர்களும் களமிறங்கிவிட்டனர், ஆனால், இந்திய அணிக்காக நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 24 விக்கெட்டுகளை வெறும் 7 போட்டிகளில் வீழ்த்திய ஷமியால் அடுத்து களமிறங்க முடியவில்லை. அந்த தொடரிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவரும் ஷமிதான். உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டியில் விளையாடாத அவர் தற்போதைய தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், ஷமியின் காயம் குறித்து (Mohammed Shami Injury) அதிர்ச்சிகர தகவல் இன்று வெளியாகி உள்ளது. ஷமிக்கு நீண்டகால இடது குதிகால் பிரச்சினை உள்ளதாகவும், உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக அவர் தொடர்ந்து ஊசி போட்டுக்கொண்டு ஆட்டத்தில் பங்கேற்றார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முழு உலகக் கோப்பை தொடரையும் அவர் மிகுந்த குதிகால் வலியுடன் விளையாடியது பலருக்கும் தெரியாது என ஷமி உடன் விளையாடிய முன்னாள் பெங்கால் அணி வீரர் ஒருவர் ஊடகம் ஒன்றில் தகவல் அளித்துள்ளார்.
மேலும் அந்த வீரர் கூறுகையில்,"வயதாகும்போது, ஒரு சிறு காயத்தில் இருந்தோ அல்லது பெரிய காயத்தில் இருந்தோ மீள்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்றார். இந்திய அணி உலகக் கோப்பையில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என மிக பெரிய அணிகளை வீழ்த்தியதற்கு முக்கிய காரணி ஷமிதான். அவர் இப்போது மட்டுமில்லை 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின்போதும், ஷமிக்கு முழங்கால் வீக்கம் இருந்தது. அவர் அறுவை சிகிச்சையை விடுத்து, இந்தியாவுக்காக விளையாட ஊசி போட்டு விளையாடினார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஸ்லோ ஓவர் ரேட் அபராதம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் செக்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ