8 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தானில் மீண்டும் இலங்கை
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி, அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் மோத உள்ளது.
இதில் கடைசி டி20 போட்டி, அவர் 29-ம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற இருக்கிறது.
அங்கு சென்று விளையாட, இலங்கை வீரர்கள் தங்கள் தயக்கத்தை தெரிவித்தனர். இது தொடர்பாக, வீரர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பினர். அதில் லாகூர் போட்டியை வேறு நாட்டில் நடத்த கோரிக்கை வைத்தனர். ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்துவிட்டது.
இந்நிலையில் கடைசி 20 ஓவர் போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய போது தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. இந்த தாக்குதலில் 6 இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் பலர் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தால் இலங்கை அணி, பாகிஸ்தான் தொடரை ரத்து செய்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்பியது. அதன்பின் எந்த நாடும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.
இந்நிலையில் தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பாதுகாப்பு விஷயங்கள் பற்றி பேசியது. அந்த வகையில் தற்போது லாகூர் சென்று விளையாட இலங்கை அணி முடிவு செய்துள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.