கம்பீரை பேட்டால் வெளுத்த தினேஷ் கார்த்திக்... ஆதரவு கொடுத்த சுனில் கவாஸ்கர்
கம்பீர் கூறிய கருத்துக்கு தினேஷ் கார்த்திக் தனது பேட்டால் பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஐபிஎல் 15ஆவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அட்டகாசமான பல இன்னிங்ஸ்களை ஆடினார். அந்த அணிக்கு சிறந்த பினிஷராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
அவரது ஆட்டத்தைப் பார்த்த பலரும் வயதானாலும் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டம் இன்னமும் போகவில்லை என புகழ்ந்தனர். அதற்கேற்றபடி இந்திய அணியிலும் அவர் நீண்ட நாள்களுக்கு பிறகு இடம்பிடித்தார்.
இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் நடந்துவரும் டி20 தொடரில் ஆடிவரும் தினேஷ் இந்தத் தொடரிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
முதல் போட்டியில் இரண்டு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டாலும், இரண்டாவது போட்டியின் முக்கியமான கட்டத்தில் 30 ரன்களை குவித்து நம்பிக்கை அளித்தார்.
ஆனால் மூன்றாவது போட்டியில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தார். அந்தச் சமயத்தில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாஜகவைச் சேர்ந்தவருமான கௌதம் கம்பீர், “டி20 உலகக்கோப்பை அணியில் ஏழாவது இடத்தில் களமிறங்கக்கூடியவர் பந்துவீசக்கூடியவராக இருந்தால்தான் நன்றாக இருக்கும்.
அணியில் ரிஷப் பண்ட், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் போன்றோர் இருப்பார்கள் என்பதால், தினேஷ் கார்த்திக்கு அணியில் இடம் கொடுப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.
அதுமட்டுமின்றி ரோஹித்தும், விராட் கோலியும் பார்முக்கு திரும்பிவிட்டால், தினேஷ் கார்த்திக்கிற்கு இடமே இருக்காது. அடுத்ததாக தீபக் ஹூடா, பண்ட், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே தினேஷ் கார்த்திக் இடத்தில் சில ஓவர்களை வீசும் பௌலரை சேர்க்க வேண்டும்.
இதைத்தான் நான் விரும்புவேன். தினேஷ் கார்த்திக் இனியும் தனது திறமையை நிரூபிக்க முடியாது. ஐபிஎல் வேறு, இந்திய அணி வேறு” என்று பேசியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். ஆனால் அமைதி காத்த தினேஷ் கார்த்திக் நேறு நடந்த 4ஆவது போட்டியிலும் களமிறங்கினார். இந்திய அணிக்கு வாழ்வா சாவா என்ற போட்டியில் டாப் ஆர்டர் சரசரவென சரிய தினேஷ் கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்களை குவித்து கௌதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் கம்பீருக்கு இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லை தவிர்த்து, இந்திய அணிகாக விளையாடி நீண்ட காலமாகிவிட்டது. அவரால் இனி இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடமுடியாது. நீக்கிவிடுவதுதான் நல்லது என பலர் பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
அவரால் முடியாது என நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்.. அவர் தகுதியான வீரர் என்பதால்தான் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். முக்கியமாக அவர் தன்னை நிரூபித்தும் காட்டிவிட்டார். இனியும் அவர் என்ன செய்ய வேண்டும்? அதனையும் நீங்களே கூறிவிடுங்கள். டி20 உலகக்கோப்பை அணிக்கும் தினேஷ் கார்த்திக் நிச்சயம் தேவை” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR