டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் கொண்ட இத்தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.


டாஸில் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபினவ் முகுந்தும், கவுசிக் காந்தியும் ஆரம்பம் முதலே பவுண்டரிகளும் சிக்சர்களுமாக அடித்து ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 132 ரன்களைச் சேர்த்தனர். தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.


கடினமான இலக்குடன் ஆடவந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 4 விக்கெட்களை பறிகொடுத்தது. கணேஷ்மூர்த்தி வீசிய அந்த ஓவரில் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்கள். அந்த அணி 7.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 38 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.மழைக்கு பிறகு ஆடிய அந்த அணி 18.5 ஓவரிகளில் 93 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.


122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.