வீடியோ: அணியில் இடம் தேடும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு பர்த்டே வாழ்த்துக்கூறிய BCCI
ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin) தனது 34 வது பிறந்த நாளை இன்று (செப்டம்பர் 17) கொண்டாடுகிறார்.
புதுடெல்லி: ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் எவ்வாறு ஏற்றம் இறக்கம் இருக்கும் என்பதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டு தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் 2016 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின். ஆனால் இன்று அவர் தனது சொந்த அணியில் இடம் பெற போராடி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில், இந்த இந்திய அணியில் இடம் பிடித்தார். விளைவு களத்தில் ஆடும் 11 பேரில் அவரது பெயர் இடம் பெறவில்லை. அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர்களின் 11 பேரில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் (R Ashwin) தனது 34 வது பிறந்த நாளை இன்று (செப்டம்பர் 17) கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளில் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI), உலகின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை ஒரு வீடியோ மூலம், அவரின் சிறந்த பயணத்தை போற்றும் விதமாக வாழ்த்தி உள்ளது. அஸ்வின் 65 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அஸ்வின் பிறந்தநாளை வாழ்த்தி பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. இந்த வீடியோவில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரனின் 100, 200 மற்றும் 300வது விக்கெட்டுகளை வீழ்த்துவது காட்டப்பட்டுள்ளன. அஸ்வின் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 100வது விக்கெட்டையும், 200வது விக்கெட் நியூசிலாந்துக்கு எதிராகவும், 300வது விக்கெட்டை இலங்கைக்கு எதிராகவும் கைப்பற்றி உள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக வேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்திய உலக சாதனை படைத்துள்ளார். 54வது போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த சாதனை பட்டியலில் டெனிஸ் லில்லி இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அஸ்வின் தனது 18வது டெஸ்டில் 100வது விக்கெட்டையும், 37வது போட்டியில் 200வது விக்கெட்டையும் கைப்பற்றினார். 100 மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய அதிவேக இந்தியரும் இவர் ஆவார்.
2016 ஆம் ஆண்டில் ரவிச்சந்திரன் 43.71 சராசரியாக 612 ரன்கள் எடுத்தார். அதில் 2 சதம் அடங்கும். அதே ஆண்டு 72 விக்கெட்டுகளையும் எடுத்தார். அவரின் இந்த சாதனையை பாராட்டி ஐ.சி.சி (ICC), அவரை 2016 சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக தேர்வு செய்தது. சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அஸ்வின் வாழ்க்கையில் இறக்கம் ஆரம்பமானது. 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் 2016 ஆம் ஆண்டின் செயல்திறனை மீண்டும் அவரால் செய்ய முடியவில்லை. இந்த காரணத்திற்காக, இந்திய அணியின் பதினொறு பேர் கொண்ட குழுவில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.