உலக சாதனை செய்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி
சர்வதேச ஒருநாள் போட்டியில் உலக சாதனை செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
மான்செஸ்டர்: பாகிஸ்தானுக்கு எதிரான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி துரிதமாக 11 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைப்பெற்றது வரும் 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 140(113) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக விராட் கோலி 77(65), கே.எல். ராகுல் 57(78) ரன்கள் குவித்தனர்.
இந்த போட்டியில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்ததன் மூலம் தனது கிரிக்கெட் பயணத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது கோஹ்லி 222 இன்னிங்ஸ்களில் (230 போட்டிகளில்) 11,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சச்சின், கங்குலிக்கு பிறகு, இந்த சாதனை செய்த 3வது இந்திய வீரர் ஆவார். சர்வதேச அளவில் 9 வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்ஸ்களில் (284 போட்டிகளில்) 11,000 ரன்களை எட்டியுள்ளார். டெண்டுல்கரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ்களில் (295 போட்டிகளில்) இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அதேபோல சவுரவ் கங்குலி 288 இன்னிங்ஸ்களில் (298 போட்டிகளில்) மைல்கல்லை எட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.