உலக குத்துச்சண்டை பைனலுக்கு தகுதி பெற்ற சாதனை நாயகி மேரிகோம்
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்-க்கு ஆறாவது முறையாக தங்கம் வெல்ல வாய்ப்பு.
10_வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் தொடங்கியது. இந்த தொடர் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியை சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இணைந்து நடத்துகிறது.
மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 72 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர். இந்தியா சார்பில் மேரிகோம் தலைமையில் 10 வீராங்கனை கலந்துக் கொண்டனர்.
இன்று நடைபெற்ற 48 கிலோ எடைப் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வட கொரியாவை சேர்ந்த கிம் ஹயாங் மியை எதிர்கொண்டார் இந்திய வீராங்கனை மேரிகோம். இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
மேரிகோம் ஏற்கனவே 2002, 2005, 2006, 2008, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். 2001 ஆம் ஆண்டு மட்டும் இவர் வெள்ளி பதக்கத்தை வென்றார். ஐந்து முறை தங்கபதக்கம் வென்ற மேரிகோம், ஆறாவது முறையா, இம்முறையும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
35 வயதான மேரிகோம் இறுதிபோட்டியில் உக்ரைனின் ஹன்னா ஓகோடா-வை எதிர்கொள்கிறார். இவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக பல சாதனைகளை செய்துள்ளார். மீண்டும் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி வெற்றி பெற்று நாட்டின் பெருமையை நிலைநாட்டுவார் என்பதில் ஐயமில்லை.