WTC Final: அதிர்ஷ்ட மழையில் இந்தியா... இருந்தும் ஆதிக்கத்தை தொடரும் ஆஸ்திரேலியா!
World Test Championship 2023 Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், மூன்றாவது நாள் உணவு இடைவேளைக்கு முன் வரை, இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை எடுத்தது.
World Test Championship Final 2023 Day 3: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முக்கியமான மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடந்தது. முதல் இரண்டு நாள்களில் ஆஸ்திரேலியா பேட்டிங், பௌலிங் என முழு ஆதிக்கத்தையும் செலுத்தி வந்த நிலையில், இன்றைய முதல் செஷனில் இந்தியா, ஆஸ்திரேலியாவை விரக்தி நிலைக்கு ஈட்டுச்சென்றது எனலாம்.
இதுவரை...
ஆஸ்திரேலியா அணி, ஏறத்தாழ 5 செஷன்கள் பேட்டிங் விளையாடி 469 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக ஹெட் 163, ஸ்மித் 121 ரன்களை எடுத்தனர். சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆறுதல் அளித்தார். ஆஸ்திரேலியாவின் பேட்டிங் 121.3 ஓவர்கள் வரை தாக்குபிடித்த நிலையில், இந்தியாவும் அத்தகைய பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனால், இந்திய அணியின் டாப்-ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து நேற்றைய இரண்டாவது நாளில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித், கில், புஜாரா, கோலி ஆகியோர் சொதப்பினாலும் ஜடேஜா - ரஹானே ஆகியோர் சற்று ஆறுதல் அளித்தனர். இருப்பினும், ஜடேஜா 48 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
மேலும் படிக்க | சாரா அலி கானா? சாரா டெண்டுல்கரா? குழப்பத்தில் சுப்மன் கில் ரசிகர்கள்!
முதல் ஓவரிலேயே விக்கெட்
இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷனை ரஹானே - கேஎஸ் பரத் ஆகியோர் தொடங்கினர். இன்றைய போட்டியின் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் கேஎஸ் பரத் கிளீன் போல்டாகி வெளியேறினார். போலாண்ட் வீசிய அந்த இன்-ஸ்விங்கரை அவர் கணிக்கவேயில்லை எனலாம். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் அந்த ஓவரிலேயே கவாஜாவுக்கு ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுக்க, அதனை அவர் தவறவிட்டார்.
தூணாக நின்ற ஜோடி
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஷர்துல் - ரஹானே ஜோடி தடுத்தாடுவதிலும், ரன்களை குவிப்பதிலும் சிரத்தையாக செயல்பட்டது. இடையில், கிரீன், வார்னர் ஆகியோரும் இரண்டு கேட்ச்களை தவறவிட்டனர். ரஹானே அரைசதத்தை கடந்தது மட்டுமின்றி, டெஸ்ட் அரங்கில் அவர் 5 ஆயிரம் ரன்களை எடுத்து புதிய மைல்களையும் கடந்தார். தாக்கூர் நிலைத்துநின்று விளையாடி வந்த சூழலில், கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். ஆனால், அது நோ-பால் என்பதால் அவர் தப்பித்தார் எனலாம். இதேபோல், நேற்றைய ஆட்டத்திலும், பாட் கம்மின்ஸ் ரஹானேவை அவுட்டாக்கியிருந்த நிலையில், அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது.
சதத்தை தவறவிட்ட ரஹானே
மூன்றாவது நாள் உணவு இடைவேளைக்கு முன்னர் வரை இந்தியா 60 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை எடுத்தது. ரஹானே 89 ரன்களுடனும், ஷர்துல் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த செஷனில் இந்தியா 22 ஓவர்கள் விளையாடி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 109 ரன்களை எடுத்துள்ளது. தற்போது 4 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில், இந்தியா ஆஸ்திரேலியாவை விட 209 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உணவு இடைவேளைக்கு பின் பேட்டிங் செய்த ரஹானே கம்மின்ஸிடம் வீழ்ந்து பெவிலியன் திரும்பினார். அவர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ