இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரராக இருக்கும் யஷஸ்வி ஜெய்ஷ்வால், டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் என மூன்று பார்மேட்டுகளிலும் சர்வதேச கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டார். உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் அவர்,  ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுவது பலருக்கும் தெரிந்திருக்கும். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த சாதனை இவர் வசம் தான் இருக்கிறது. இப்படி பல சுவாரஸ்யங்களை வெளிக்காட்டாமல் வைத்திருக்கும் யஷஸ்வி சொந்த மாநிலம் உத்தரப்பிரதேசம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யஷஸ்வி ஜெய்ஷ்வால் குடும்பம்


உத்தரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள சூரியவான் கிராமத்தில் 28 டிசம்பர் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையானது. யஷஸ்வியின் தந்தை பூபேந்திர ஜெய்ஸ்வால் பதோஹியில் சிறிய ஹார்டுவேர் கடை நடத்தி வந்தார். இவரது தாயார் கஞ்சன் ஜெய்ஸ்வால் இல்லத்தரசி. யஷஸ்வி, அவரது வீட்டில் ஆறாவது குழந்தை. சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. 11 வயதில், மும்பைக்கு சென்ற யஷஸ்வி அங்கு கிரிக்கெட் விளையாட தொடங்கினார்.


யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் கல்வி


யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது ஆரம்பக் கல்வியை உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் தனது கிராமத்திலேயே படித்தார். உ.பி.யில் உள்ள பிபிஎம்ஜி பப்ளிக் பள்ளியில் தான் படித்தார். ஆனால் பொருளாதார நெருக்கடியால் அவரால் அதிகம் படிக்க முடியவில்லை. மும்பைக்கு சென்ற அவர், 11 வயதில் இருந்து கிரிக்கெட் கற்றுக் கொள்ள தொடங்கினார். அங்கு  ஸ்பிரிங்ஃபீல்ட் உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை முடித்தார்.


மும்பையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்


யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பைக்கு வந்த பிறகு தனக்கு வீடு இல்லாததால் தினசரி வாழ்க்கையிலேயே பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மும்பையில் ஏற்கனவே அவருடைய மாமா குடும்பம் இருந்தால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து அங்கு வந்தார். வோர்லியில் தங்கியிருந்த அவரின் மாமா வீடும் சிறியதாக இருந்ததால் கல்பாதேவி என்ற பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் பால் பண்ணையில் இருந்து நீக்கப்பட்டதால் மீண்டும் தங்குவதற்கு பிரச்சனையை ஏற்பட்டிருக்கிறது. 


கிரிக்கெட் மீதான அவரது மோகம் அதிகமாக இருந்ததால், அவர் தனது பிரச்சினைகளை தனது குடும்பத்தாரிடம் கூட சொல்லவில்லை. ஏனெனில் அவரது குடும்பத்தினர் தன்னைத் திரும்ப உத்தரப்பிரதேசத்துக்கே அழைத்துக் கொள்வார்கள் என நினைத்தார். கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போய்விடும் என்று யஷஸ்வி ஜெய்ஷ்வால் பயந்தார். பல நாட்கள் அலைந்து திரிந்த அவர் ஒரு இடத்தில் தஞ்சம் அடைந்தார். மும்பை ஆசாத் மைதானத்தில் உள்ள முஸ்லிம் யுனைடெட் கிளப் கூடாரத்தில் யஷஸ்வி நீண்ட காலம் தங்கியிருந்தார். பகலில் கிரிக்கெட் விளையாடுவதும், இரவில் உணவு சமைப்பதும் வழக்கம். அப்பா அடிக்கடி பணம் அனுப்பியபோதும், மும்பையில் அவருக்கு வாழ போதுமானதாக இல்லை.


பயிற்சியாளர் ஜ்வாலா சிங் சந்திப்பு


ஜெய்ஸ்வால் மூன்று வருடங்கள் அங்கேயே தங்கி கிரிக்கெட் விளையாடி சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். பல நாட்கள் பசியோடு தூங்க வேண்டியிருந்தது. தனது செலவுக்கு ஆசாத் மைதானம் அருகே பானிபூரி விற்கவும் செய்தார் யஷஸ்வி. மூன்று வருட போராட்டத்திற்குப் பிறகு, ஜெய்ஸ்வாலின் திறமையை கிரிக்கெட் பயிற்சியாளர் ஜ்வாலா சிங் அடையாளம் கண்டு கொண்டார். அவர் அவருக்கு தங்குமிடத்தை அளித்து அவரது பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் ஆனார். யஷஸ்வியை பல போட்டிகளில் பங்கேற்க வைத்தார். அதன் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் மேம்படத் தொடங்கியது.


ஜெய்ஷ்வால் பெற்ற வாய்ப்பு


2015ல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் கில்ஸ் ஷீல்ட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 319 ரன்கள் எடுத்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். அப்போது தான் அவரின் பெயர் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் அவர் மும்பையின் 16 வயதுக்குட்பட்ட அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும் இடம் பெற்றார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பாக ஆடியதால் 2018 ACC அண்டர்-19 ஆசிய கோப்பைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் இந்தியா வென்றது. அவர் போட்டியின் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 


ரஞ்சி டிராபியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்


யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 ஜனவரி 2019, ரஞ்சி டிராபியில் மும்பை கிரிக்கெட் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமாகி 20 ரன்கள் எடுத்தார். இதற்குப் பிறகு, 28 செப்டம்பர் 2019 அன்று, விஜய் ஹசாரே டிராபியில் மும்பைக்காக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் யஷஸ்வி அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டில், 17 வயதில், விஜய் ஹசாரே டிராபியில் இரட்டை சதம் அடித்த இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றார். மும்பை அணிக்காக விளையாடிய அவர் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 154 பந்துகளில் சதம் அடித்தார். ஜெய்ஸ்வால் அந்த சீசனில் 25 சிக்ஸர்கள் மற்றும் 49 பவுண்டரிகள் உட்பட 112 -க்கு மேல் சராசரியாக 564 ரன்கள் குவித்தார்.


இந்திய அணியில் ஜெய்ஷ்வால்


ஜெய்ஸ்வாலின் சிறப்பான பேட்டிங் காரணமாக 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஜெய்ஸ்வாலும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அரையிறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 105 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்தார். இதனால் அப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. 


இந்த தொடரில், அவர் ஆடிய ஆறு போட்டிகளில் 400 ரன்கள் எடுத்தார். இந்தியா 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்லவும் துருப்புச் சீட்டாக இருந்தார். இது இந்திய கிரிக்கெட் உலகில் கவனத்தை அவர் பக்கம் முழுவதுமாக திரும்ப செய்தது. இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தாலும், அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்காக ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல்


யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது நிலையான சிறப்பான ஆட்டத்தால் ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் ஈர்த்தார். 2020 ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ஸ்வாலை ரூ 2.4 கோடிக்கு வாங்கியது. இது அவரது அடிப்படை விலையை விட 12 மடங்கு அதிகம். அவர் ஐபிஎல்லில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டியில் 6 ரன்கள் எடுத்த பிறகு தீபக் சாஹர் பந்துவீச்சில் கேட்ச் அவுட் ஆனார். ஜெய்ஸ்வால் அந்த சீசனில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி 40 ரன்கள் எடுத்தார். அவர் அடுத்த சீசன் 2021 ஐபிஎல்லில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி 10 போட்டிகளில் 24.90 சராசரியில் 249 ரன்கள் எடுத்தார். அந்த தொடரில் அவர் CSK க்கு எதிராக தனது முதல் அரை சதத்தை அடித்தார்.


ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தக்க வைத்துக் கொண்டது. 2022 சீசனில், ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் 25.80 சராசரியில் 258 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2023-ல் ஜெய்ஸ்வாலை அதே தொகைக்கு ராயல்ஸ் தக்க வைத்துக் கொண்டது. 2023 சீசனில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல்லில் தனது முதல் சதத்தை அடித்தார். இதே தொடரில் ஜெய்ஸ்வால் ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அவர் 13 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.


ஜெய்ஸ்வால் 2023 ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 625 ரன்கள் எடுத்தார். சராசரியாக 48.08 மற்றும் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் 163.61. இதில் அவர் 82 பவுண்டரிகள் மற்றும் 26 சிக்ஸர்களை அடித்தார். ஜெய்ஸ்வால் தனது சிறப்பான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். அதேநேரத்தில் இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார்.


சர்வதேச கிரிக்கெட்டில் ஜெய்ஷ்வால்


ஜெய்ஷ்வால் 2023 ஜூலை 12 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதம் அடித்தார். இதன் மூலம், ஷிகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மாவுக்குப் பிறகு, அறிமுக டெஸ்டிலேயே சதம் அடித்த மூன்றாவது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அறிமுகத்திலேயே சதம் அடித்த 17வது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில், 387 பந்துகளை எதிர்கொண்ட அவர், 16 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 171 ரன்கள் எடுத்தார். அதேசமயம் இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் 91 ரன்கள் எடுத்தார்.


டி20 கிரிக்கெட்


அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற 20 ஓவர் தொடரிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அந்த போட்டியில் அவர் ஒரு ரன்னில் அவுட்டானார். ஜெய்ஸ்வால் இதுவரை இந்தியாவுக்காக 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 35.43 சராசரியில் 248 ரன்கள் எடுத்துள்ளார்.


மேலும் படிக்க | Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா...? சகோதரர் அளித்த விளக்கம்


யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சொத்து மதிப்பு


யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது குழந்தைப் பருவத்தை வறுமையில் கழித்திருக்கலாம். ஆனால் இன்று அவர் கோடீஸ்வரர். ஜெய்ஸ்வாலின் மொத்த சொத்து மதிப்பு ரூ.16 கோடி என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஆண்டு வருமானம் சுமார் ரூ.4 கோடி. மாத வருமானம் ரூ.35 லட்சம். 2020 ஆம் ஆண்டில், ஐபிஎல் உரிமையாளரான ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை ரூ 2 கோடியே 40 லட்சத்திற்கு வாங்கியது. பின்னர் 2022 சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. 2023 ஐபிஎல் போட்டியிலும் 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். ஐபிஎல் ஒப்பந்தத்தில் மட்டும் யஷஸ்வி இதுவரை ரூ.12 கோடி சம்பாதித்துள்ளார்.


யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்தும் அவர் நல்ல தொகையை சம்பாதிக்கிறார். இது தவிர, இந்தியாவுக்கான ஒவ்வொரு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கும் அவர் சம்பளம் பெறுகிறார். இதுதவிர விளம்பரங்கள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கிறார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்திற்காக மும்பை தானேயில் கோடிக்கணக்கான மதிப்புள்ள 5 BHK பிளாட் வாங்கியுள்ளார். என்னென்ன கார் வைத்திருக்கிறார் என்ற விவரம் மட்டும் தெரியவில்லை. 


மேலும் படிக்க | Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது...' - பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ