சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ராஜாராமின் பதவிக் காலம் கடந்த 2016 மே 26-ஆம் தேதி முடிவுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு மார்ச் 31-இல் ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்தது. அதில் இருந்து 10 பேரிடம் ஆளுநர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.


அதில், யுஜிசி முன்னாள் துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எம்.கே.சூரப்பா, சென்னை ஐஐடியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.பொன்னுசாமி ஆகிய மூன்று பேர் கொண்ட இறுதிப் பட்டியல் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.


இவர்களில் கர்நாடகாவடைச் சேர்ந்த பேராசிரியர் சூரப்பாவை துணைவேந்தராக நியமித்து தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் வகிப்பார் எனவும் ஆளுநரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்தும், காவிரி மேலாண்மை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசை எதிர்த்தும் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதிலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற பந்த் போராட்டத்தின்போது கர்நாடக பேருந்துகள் நிறுத்தப்பட்டன.


மேலும் கர்நாடகத்தின் வாட்டாள் நாகராஜ், தமிழகத்தின் பேச்சை கேட்டு காவிரி வாரியம் அமைத்தால் புரட்சி வெடிக்கும் என்றும் ரஜினி, கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர்கள் இருவரும் கர்நாடகத்திற்கு வருவதையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறி வருகிறார் 


இந்த நிலையில் எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவதை போல நேற்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா என்பவர் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவில் நேற்று கவர்னர் கையெழுத்திட்டுள்ளார். 


இந்த நடவடிக்கையால் தமிழக அரசியல் தலைவர்கள் கொதித்தெழுந்துள்ளனர். இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது:- 


நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை 'காவி' மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


இது குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், கன்னடர் ஒருவரை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருப்பது சரியல்ல. ஆளுநர் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.