தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாலை 5 மணியளவில் கர்நாடக ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆளுநர் மூலம் பா.ஜ.க. ஆட்சி பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததாக ஆளுநர் கூறியிருக்கிறார். ஆனால் கடந்த காலங்களில் மணிப்பூரில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 60 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கிய போது 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க.வை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். 


அதேபோல, மேகாலயாவில் 28 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக விளங்கிய காங்கிரஸ்; கட்சியை ஆட்சியமைக்க அழைக்காமல் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க.வை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கிய போதும் ஆட்சி அமைக்க ஆளுநர் அனுதிக்கவில்லை. தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்பதை கடந்த காலங்களில் புறக்கணித்து ஜனநாயக படுகொலை செய்த பா.ஜ.க. இன்றைக்கு கர்நாடகத்தில் பா.ஜ.க.வை தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைத்திருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.


கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா முழுவதுதிலுள்ள 29 மாநிலங்களில் 26 மாநிலங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களை நரேந்திர மோடி அரசு ஆளுநர்களாக நியமித்தது. இத்தகைய ஆளுநர்களை நியமித்ததன் மூலம் அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நரேந்திர மோடி மறைமுகமாக இயக்கி வருகிறார். 


தமிழகத்தில் 108 அ.தி.மு.க. உறுப்பினர்களோடு ஆட்சி செய்து வருகிற எடப்பாடி அரசை ஒரு உறுப்பினர் கூட இல்லாத பா.ஜ.க. ஆளுநர் மாளிகையிலிருந்து ஆட்டிப்படைத்து வருகிறது. இத்தகைய ஜனநாயக, சட்டவிரோத செயல்களை நரேந்திர மோடி துணிந்து செயல்படுத்தி வருகிறார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 இடங்களில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் ஆக மொத்தம் 116 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கிற கட்சிகளை அழைக்காமல் 103 இடங்களை மட்டுமே பெற்றிருக்கிற பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் மக்கள் விரோத செயலை ஆளுநர் மூலமாக மத்திய பா.ஜ.க. அரசு செய்திருக்கிறது. 


இதன்மூலம் ஜனநாயகத்தை பா.ஜ.க. குழிதோண்டி புதைத்திருக்கிறது. இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் அறுதிப் பெரும்பான்மை பெற வாய்ப்பே இல்லாத பி.எஸ். எடியூரப்பாவை முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்த கர்நாடக ஆளுநரை கண்டிக்கிற வகையில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 


இதில் பெருந்திரளான காங்கிரஸ்கட்சியினர் கலந்து கொண்டு ஆளுநரின் செயலை கண்டித்தும், பா.ஜ.க.வின் ஜனநாயக விரோத போக்கிற்கு எதிராகவும் கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு. திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.