ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி மறுத்தும் தமிழக அரசு அறிவித்து இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்து இருக்கிறது என்று வந்துள்ள செய்தியும் பாராட்டுக்கு உரியதாகும்.


கடந்த 32 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து மறியல், உண்ணாவிரதம், நடைப்பயணம் என்ற பல போராட்டங்களை நடத்தியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடுத்தும், நான் தொடர்ந்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு செப்டம்பம் 28 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்றேன்.


ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அதற்குத் தடை வாங்கியது. உச்சநீதிமன்றத்தின் 36 அமர்வுகளில் தொடர்ந்து நானும், வழக்கறிஞர் தேவதாசும் பங்கேற்றோம்.


அந்த நீதிமன்றத்தில் நான் மிக வலுவான வாதங்களை வைத்தபோதிலும் 2013 ஏப்ரல் 2 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதன்பின்னர் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் தொடுத்த வழக்கு பின்னர் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.


நாசகார ஸ்டெர்லைட்டின் விரிவாக்கத்தை எதிர்த்து குமரெட்டியாபுரம் கிராமத்து மக்களும், சுற்றுக் கிராம மக்களும் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தி வந்தது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.


தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு வழங்கிய அனுமதி மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தொடர்ந்து அனுமதி இல்லை என்றும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி அளிக்கவில்லை என்றும் வந்துள்ள செய்தி குமரெட்டியாபுரம் களம் அமைத்த போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு எடுத்த முடிவை வரவேற்கிறேன். ஸ்டெர்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் விருப்பமும், எனது நிலைப்பாடும் ஆகும்.


இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.