வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் -புதுவை முதல்வர் நாராயணசாமி! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாறு காணாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்துவருகிறது. இதனால், இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர். அதில் 25 பேர் நிலச்சரிவில் சிக்கியும், 4 பேர் வெள்ளத்தில் மூழ்கியும் உயிரிழந்துள்ளனர். கேரளாவை பொருத்த வரை இதுவரை 439 நிவாரண முகாம்களில் 53,501 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி எர்ணாகுளம், ஆலப்புழா, வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துவருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் பினராயி விஜயன் ராணுவ விமானம் மூலம் ஆய்வு செய்தார். மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு புதுச்சேரி அரசின் சார்பாக வெள்ள நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.