சென்னை: முன்னேறிய வகுப்பினருக்காக அவசர அவசரமாக மத்திய அரசு அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பாக 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கின்றது. சமூக நீதியின் தாயகத்தில் வாழக்கூடிய நம்முடைய நாக்கில் தேனைத்தடவி ஏமாற்ற நினைக்கின்றது மத்திய அரசு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏற்கனவே, பொதுப்பிரிவினருக்கான 31 சதவிகித இட ஒதுக்கீடில் நடைமுறையில் சிறப்பான முறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதில் முன்னேறிய சாதியினர் உள்ளிட்ட திறமையுள்ள அனைத்து பிரிவினரும் போட்டியிட்டு தேர்ச்சி பெறுகின்றார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகவே, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், இந்த அரசு அசையாமல் உறுதியாக நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கடந்த 9 ஆம் தேதி பேசினார்.


எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜூலை 8 ஆம் தேதி மாலை நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்கள்.


இந்தநிலையில், முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து கலந்து ஆலோசிக்க இன்று (ஜூலை 8) அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, பாமக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.


ஆனால் இந்த முக்கியமான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.