திருவண்ணாமலை தொகுதியில் 180 வாக்குச்சாவடி பதட்டமானவை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 180 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 180 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு தொகுதிகள், திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் வருவதால் தேர்தல் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,... திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இரண்டு வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தொகுதிகள் வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 1719 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளது. இதில் 180 மையங்கள் பதட்டமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. பறக்கும் படைகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குபதிவு மையங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் வாக்குப்பதிவான இயந்திரங்கள் திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். திருப்பத்தூரில் 267 வாக்குப்பதிவு மையங்களும் ஜோலார்பேட்டையில் 265 வாக்குபதிவு மையங்களும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தால் தேர்தல் வாக்குபதிவை பாதிக்காகது என அவர் தெரிவித்து இருந்தார். தேர்தல் நாள் அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்ரா பவுர்ணமி கிரிவலம் இரவு 7 மணிக்கு தான் தொடங்கும். எனவே அங்குள்ள பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி வாக்குப்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், நகரத்திற்குள் உள்ள வாக்குப்பதிவு மையங்கள் அதிகபட்சம் 2 கிலோ மீட்டரில் இருந்து 1½ கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளது. அதனால் சித்ரா பவுர்ணமியின் போது வாக்குப்பதிவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்து இருந்தார்.
கிரிவலம் செல்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் வருபவர்கள் பயண நேரத்தை கணக்கு செய்து வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.