119 எம்.எல்.ஏக்கள் தான்- மீதமுள்ளவர்கள் எங்கே?
சென்னை ஐகோர்ட்டில் காஞ்சிபுரம் காவல்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் 119 எம்.எல்.ஏக்களின் வாக்குமூலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு ரெசார்ட்டில் கடந்த 6 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சட்டமன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏக்களை கடந்த சில நாட்களாக காணவில்லை எனவும் அவர்களை விரைவில் கண்டுபிடித்து தருமாறும் சென்னை ஐகோர்ட்டில் இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களின் உடல்நிலை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து வாக்குமூலம் பெற்று கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலங்களை காஞ்சிபுரம் எஸ்.பி இன்று சென்னை ஐ கோர்டில் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையில் 119 எம்.எல்.ஏக்களின் வாக்குமூலங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. எனவே மீதமுள்ள எம்.எல்.ஏக்கள் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.