புதுடெல்லி: ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் இரு அணிகளில் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடையாது என்றும், அந்த சின்னம் முடக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

27 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் 1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டனர். 


ஜெயலலிதாவுக்கு மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிளந்தது. இதையடுத்து நஜிம் ஜைதி நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதில், இரட்டை இலை யாருக்கும் இல்லை என அறிவித்து அச்சின்னத்தை முடக்கி வைத்து உத்தரவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இரட்டை இலை இல்லை என்றாகிவிட்டது.


இந்நிலையில் எந்த சின்னம் வேண்டும் என்று இருதரப்பும் இன்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


அதிமுக என்ற கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இருதரப்பும் 3 சின்னங்களை தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.