தமிழகத்தில் புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் தொடகப்பட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் இந்த கல்லூரி நிகழ் கல்வி ஆண்டே தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:-


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது ஏழு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. மேலும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.


குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கிடும் வகையில், தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவ தமிழக அரசு தீர்மானித்துள்ளது.


அதன்படி விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி நிகழ் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும்.


இந்தப் புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு முதலாம் ஆண்டில் 80 இடங்களுக்கும், 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு முதலாம் ஆண்டில் 80 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இந்தப் புதிய அரசு சட்டக் கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்.


மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்குத் தேவையான ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள் என தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு ரூ.2.27 கோடி வீதம் ரூ.6.81 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.