ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை
49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முதலமைச்சரின் பரிந்துரையின் மீது ஆளுநர் இன்னும் முடிவெடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம். முதலமைச்சர் ஒப்புதல் கொடுக்கும்பட்சத்தில் அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதலோடு சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இதனடிப்படையில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் 49 சிறைவாசிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யும் பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இது குறித்து அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு, அதாவது நீண்டகாலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதல்வரின் பரிந்துரையின் பேரில் நன்னடத்தை அடிப்படையில் 49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக உள்துறை செயலாளரின் கடிதத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்பித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், தமிழக அரசின் பரிந்துரைக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை எனவும், மேலும் தாமதம் செய்வார் என குற்றம்சாட்டினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆளுநரின் முடிவு என்ன என்பது குறித்து தெரிந்த பின்பு வழக்குகள் மீது முடிவு செய்யலாம் எனக்கூறினர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
ஏற்கனவே நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் வலியுறுத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோதுகூட சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தால் அக்கட்சிக்கு ஆதரவு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தமிழக அரசு 49 சிறைக்கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்திருப்பதும், அதற்கான நன்னடத்தை பரிந்துரைக் கடிதமும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் இதில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதாக தமிழ்நாடு அரசே நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதும், விடுதலைக்காக காத்திருக்கும் சிறைவாசிகளுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | அமைச்சராக இருக்க தகுதியில்லாதவர் உதயநிதி ஸ்டாலின் - ஜெயக்குமார் விளாசல்
மேலும் படிக்க | 'சேகர்பாபு அமைச்சர் பதவியில் விலக வேண்டும்' - கெடு விதித்த அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ