கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2000-ஆம் ஆண்டு தாளவாடி அருகேயுள்ள தொட்டகாஜனூரில் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களை வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். 


சத்தியமங்கலம் வனப்பகுதியில் 108 நாட்கள் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த அவர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கோபிசெட்டிபாளையம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கு தொடர்பாக வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்தனகவுடாமல்லு உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெற்று இருந்த வீரப்பன் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும், ரமேஸ் என்பவர் இதுவரை தலைமறைவாக உள்ள நிலையிலும், மீதமுள்ள 9 பேரை தற்போது கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.


18 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த இவ்வழக்கு விசாரணையின் போது, கடத்தப்பட்ட ராஜ்குமார் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது... 'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதரங்கள் இல்லாததாலும், குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததாலும் அனைவரையும் விடுவிப்பதாக' குறிப்பிடப்பட்டுள்ளது!