மேல்நிலை வகுப்புகளில் ஒற்றை மொழிப் பாடம் ஆபத்தானது: PMK
கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்!!
மேல்நிலை வகுப்புகளில் ஒற்றை மொழிப் பாடம் ஆபத்தானது: கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்!!
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் இப்போது நடைமுறையில் உள்ள இரட்டை மொழிப்பாட முறையை கைவிடலாம் என்றும், அதற்கு மாற்றாக ஒற்றை மொழிப்பாட முறையை அறிமுகப்படுத்தலாம் என்றும் அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இரண்டாவது மொழிப் பாடத்தை படிக்க வேண்டும் என்று மாணவர்கள் எவராவது விரும்பினால், அவர்கள் அதை மூன்றாவது பகுதியாக, முதன்மைப் பாடங்களில் ஒன்றுக்கு பதிலாக படித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இப்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தின்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இரு மொழிப்பாடங்கள், நான்கு முதன்மைப் பாடங்கள் என மொத்தம் 6 பாடங்கள் உள்ளன. பாடத்துக்கு 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்த மதிப்பெண்களை 500 ஆக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒரு மொழிப்பாடம், 3 முதன்மைப்பாடங்கள், ஒரு விருப்பப்பாடம் என மொத்தம் 5 பாடங்கள் மட்டுமே இனி மேல்நிலை வகுப்புகளில் இடம் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாநில பொதுக்கல்வி வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன் பரிந்துரை செய்திருக்கிறது.
அந்த பரிந்துரையின்படி 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் பகுதியில் ஒரே ஒரு மொழிப்பாடம் மட்டும் தான் இடம் பெறும். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் தான் மொழிப்பாடமாக படிக்க முடியும். இரண்டாவது பகுதியில் மூன்று முதன்மைப் பாடங்கள் இடம் பெறும். நான்காவது பகுதியில் ஏதேனும் ஒரு மொழிப்பாடத்தையோ, இரண்டாவது பகுதியில் இடம்பெறும் முதன்மைப் பாடங்களுடன் தொடர்புடைய வேறு பாடத்தையோ தேர்வு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இந்த யோசனையை தமிழக அரசு ஏற்குமா? என்பது தெரியவில்லை.
மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க வேண்டும்; மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தில் உள்ளவாறே பாடங்களின் எண்ணிக்கையை ஐந்தாக குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பரிந்துரையை பள்ளிக்கல்வித்துறை செய்திருப்பதாகத் தோன்றுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் நோக்கம் சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால், அதற்காக மொழிப்பாடத்தின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் எந்த வகையிலும் சரியானதாக தோன்றவில்லை.
பள்ளிக் கல்வித்துறையின் பரிந்துரையை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு, முதல் பகுதியில் ஒரு பாடத்தையும், மூன்றாம் பகுதியில் இன்னொரு மொழிப்பாடத்தையும் படிக்க வகை செய்யப்பட்டுள்ளதே... இதில் என்ன சிக்கல்? என்று வினவத் தோன்றலாம். ஆனால், இன்றைய சூழலில் பொறியியல் - மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், அதற்காக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு முதன்மைப் பாடங்களை படித்தாக வேண்டும்.
அதேபோல், எந்தப் பட்டப்படிப்பு படித்தாலும் அதில் கணிணி அறிவியலையும் சேர்த்து படிக்க விரும்பும் மாணவர்கள் மேல்நிலை வகுப்புகளில் நான்காவது முதன்மைப் பாடமாக கணிணி அறிவியலை தேர்வு செய்ய வேண்டியிருக்கும். 99 விழுக்காடு மாணவர்கள் நான்கு முதன்மைப் பாடங்களை படிக்கவே விரும்புவார்கள் என்பதால், அவர்களால் ஒரே ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே படிப்பது சாத்தியமாகும்.
ஒரே ஒரு மொழிப்பாடம் தான் எனும் போது அது தமிழா, ஆங்கிலமா அல்லது வேறு மொழியா? என்ற குழப்பம் ஏற்படும். தமிழகத்தில் தமிழைப் படிப்பதே தலைகுனிவு என்று கருதும் பெற்றோரும், மாணவச் செல்வங்களும் அதிகரித்து விட்ட நிலையில், தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் தமிழைப் புறக்கணித்து விட்டு ஆங்கிலப் பாடத்தைத் தான் தேர்வு செய்வர். மற்றொரு புறம் ஆங்கில மொழியை கடினமானதாக கருதும் ஊரக மாணவர்கள், அதை தவிர்த்துவிட்டு தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்வார்கள். இந்த இரு வாய்ப்புகளுமே மாணவர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தமிழைத் தவிர்த்து விட்டு, ஆங்கிலத்தை மட்டும் படிக்கும் போது அவர்கள் தாய்மொழி இலக்கணமே தெரியாதவர்களாக மாறுவார்கள். இது தமிழ் மொழியை அழிவுப்பாதைக்குத் தான் அழைத்து செல்லும். அதேபோல், ஆங்கிலத்தைத் தவிர்த்து விட்டு தமிழை மட்டும் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. இதனால் அவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும்; கல்லூரிக் கல்வியிலும் குழப்பங்கள் ஏற்படும்.
மாணவர்கள் தமிழைப் படிக்க வேண்டும், தமிழில் படிக்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆங்கில வழிக் கல்வி முறைக்கு முடிவு கட்டி விட்டு, தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும்; அதேநேரத்தில் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு ஆங்கிலப் பாடத்தை சிறப்பாக பயிற்றுவிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அது தான் பெரும்பான்மையானவர்களின் விருப்பமும் ஆகும். ஒருபுறம் தமிழில் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து விட்டு, மறுபுறம் தமிழைப் படிக்காமல் இருப்பதற்கு வகை செய்வது எந்த வகையில் நியாயம்? என்பதை பள்ளிக்கல்வித்துறை விளக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தும்படி பா.ம.க. வலியுறுத்தியது. அதைவிட சிறப்பான பாடத்திட்டம் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது ஆகும். அதேநேரத்தில் சி.பி.எஸ்.இ-யில் 5 பாடங்கள் இருப்பதால் தமிழக மாணவர்களும் அதே எண்ணிக்கையிலான பாடங்களை மட்டுமே படிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அப்படி ஒரு கோரிக்கையை யாரும் முன்வைத்ததாக தெரியவில்லை. இது குறித்து யாரிடமும் பள்ளிக்கல்வித்துறை கருத்துக் கேட்டதாக தெரியவில்லை. இப்படி ஒரு மாற்றத்தை செய்ய பள்ளிக்கல்வி அமைச்சரிடம் அதிகாரிகள் ஒப்புதல் பெற்றார்களா? என்பது கூட தெரியவில்லை. ஒற்றை மொழிப்பாட முறைக்கு மாணவர்களை தள்ளும் முறை மிகவும் ஆபத்தானது என்பதால், அதுகுறித்த பரிந்துரையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
ஒற்றை மொழிப் பாட முறையை அறிமுகப்படுத்தும் எண்ணம் எதுவுமில்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். அது சற்று நிம்மதியளிக்கிறது. எனினும், ஒற்றைமொழி பாட முறையை அறிமுகம் செய்ய பரிந்துரைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. அதனால், மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் அச்சம் முழுமையாக விலகவில்லை. அந்த அச்சத்தை முற்றிலுமாக போக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். எனவே, ஒற்றை மொழிப்பாட முறை அறிமுகம் செய்யப்படாது; இப்போதுள்ளவாறே நான்கு முதன்மைப் பாடங்கள், இரட்டை மொழிப்பாடங்கள் என ஆறு பாடங்கள் முறை தொடரும் என்றும் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும்.